Sunday, January 29, 2012

மனதின் மொழி. - அதீதம்

மனசு விசித்திரமானது இல்லைங்களா  ? கொஞ்சம் இல்லைங்க  ரொம்பவே விசித்திரமானது. அது எந்த நேரத்தில் எப்படிச் சாயும் என்பதை சொல்றது சிரமமானது. நம் செயல்களில் பெரும்பாலானவை நன்மையிலோ தீமையிலோ, வெற்றியிலோ தோல்வியிலோ முடிவது மனதின் நிலமையைப் பொறுத்து தான் இல்லைங்களா ?


NLP எனப்படும் Neuro Lingual Program சொல்லும் கருத்து என்ன அப்படின்னு பார்ப்போம். நாம் மூளை புரிந்துக் கொள்ளும் வகையில் சொல்லும் கட்டளைகள், வார்த்தைகள் மனதில் பதிவதோடு இல்லாமல் ஆழ்மனதில் சென்று தங்கிவிடும். கூடவே அது தேவையான கட்டளைகளை உடலுக்கோ அல்லது மூளைக்கோ கொடுத்துவிடும் என்கிறார்கள் அத்துறை வல்லுனர்கள். சில மன சிக்கல்களில் இருந்து விடுபட இந்த முறை நன்கு வேலை செய்கிறதாம்.  எதிராளி எப்போதும் தவறு, நான் எப்போதும் சரி என்ற எண்ணம் நேரானதா  என்றால் நிச்சயம் மாற்றப் படவேண்டிய எதிர்மறை எண்ணம் இது. அப்படியானவர்களுக்கும் இது போன்ற பயிற்சி நல்ல பலன் தரும்.  அதனால தான் எதையுமே நேரடியா, நல்ல விதமா  பேசனும் அப்படின்னு நமக்கு பெரியவர்கள் சொல்லிக் குடுக்கறாங்க.

அனுமனுக்கு பலம் இருக்கிறது. ஆனால் அதை அவர் உணராதவராக இருந்த வரை அவர் மதியூகம் மிக்க ஒரு மந்தி(ரி) அம்மட்டே. ஆனா ஜாம்பவான் அவரோட பராக்கிரமத்தை சொல்லும் போது அனுமனால் செயற்கரிய செயல் செய்யும் பலம் வந்து சேர்கிறது.  அதே போல இராமனை எடுத்துக் கொண்டால் அதி பலசாலி. ஆனால் தன் தம்பிக்கு ஒன்று என்று வந்த போது அப்படியே அத்தனை சக்தியும் வடிந்து போய் உட்கார்ந்து விடுகிறான்.  அப்போது இந்திரசித்து அல்ல, அவன் படை வீரன் யாரேனும் வந்திருந்தாலும் இராமனை எளிதில் வெற்றிக் கொண்டிருக்க முடியும். காரணம் இராமனின் மனதில் இருந்த வலு வற்றிப் போயிருந்தது  மீண்டும் தன் தம்பி உயிர்த்தெழும் வரைக்கும். 

அதைத்தான் நம்மால் முடியும் என்ற எண்ணமே பாதி பலம் என்பார்கள். அப்படியான ஒருவன் தான் வாலி.  அவனின் பலம் தன்னால் முடியும் என்பது. எதிராளியின் பலகீனம் வாலியால் முடியும், தன் பலம் அவனால் அபகரிக்கப் படுகிறது என்ற எண்ணம். எப்போது எதிராளி தன் பலம் இழப்பதாக நினைக்கிறானோ அப்போதே அவன் பாதி தோல்வி அடைகிறான். இதற்கு நேரடி வாழ்வியல் உதாரணம் சொல்ல முடியும்.

சில வருடங்களுக்கு முன்னால நேரமேலாண்மை வகுப்புக்குச் போயிருந்தேன். அதில் ஒரு அங்கமாக  "நேர்மறை/எதிர்மறை" பற்றிய  பகுதி வந்தது.  இன்ஸ்ட்ரக்டர் எதிர் மறை எண்ணம் எப்படி  நம் உடலையும் பாதிக்கும் என்பதை செயல்முறையில் காண்பித்தார்.

நல்ல பலசாலியான ஒருவனை அழைத்து கையை நீட்டச் சொல்லி வேறொருவன் மூலம் அந்தக் கையை இழுக்கச் சொன்னார். ஹ்ம்ஹூம். அவனால் முடியவே இல்லை. பின்பு காகிதத்தில் ஏதோ எழுதி கொடுத்து இதை மூன்று நான்கு முறை படி என்றார்.  பின் அதே போல கையை நீட்டச் சொல்லி  இழுக்கும் போது வெகு இலகுவாக கையை கீழே இழுக்க முடிந்தது.

அந்த காகிதத்தில் அவர் எழுதி இருந்தது

" நான் என் உடலின் சக்தியை இழந்து கொண்டிருக்கிறேன்"

அது படிக்கும் வரைக்கும் நன்றாக பலசாலியாக இருந்த அந்த மனிதன் சட்டென்று பலம் குன்றிப் போகக் காரணமானது எதிர்மறை எண்ணமன்றி வேறென்ன ?.

இப்படித்தான் பாருங்க ஒரு வக்கீல் கட்சி காரங்க கிட்ட  சொல்லிட்டிருந்தார். எல்லாமும் முடியும் முடியாதது எதுவுமே இல்லைன்னு.

பக்கத்துல இருந்த அவரோட  பையன்  சொன்னான். ஆமா   முடியாதுங்கற வார்த்தை எங்கப்பா  அகராதில இல்லவே இல்லைன்னு. இவருக்கு ஒரே சந்தோஷம். மத்தவங்க முன்னாடி நம்ம பையன் எப்படி ஒசத்தியா பேசறான்னு.   கட்சிக் காரங்க எல்லாம் போனதும் பையனக் கூப்டு நல்லா சொன்ன தம்பி. ஆமா உன்னை அப்படி சொல்லத் தூண்டினது என்ன ? என்னோட திறமையா அப்படின்னு கேட்டார்.  அதுக்கு பையன் சொன்னான்.

" அதெல்லாம் ஒண்ணுமில்ல...  நேத்து அகராதிய பொரட்டிட்டு இருக்கும் போது முடியாதுங்கற வார்த்தை இருந்த பக்கத்தையெல்லாம் நாந்தான் கிழிச்சுட்டேன் " அப்படின்னு.

அப்ப தான் வக்கீல் நினைச்சாராம். நானாவது படிச்சுட்டு கிழிக்கிறேன்.  இவன் கிழிச்சுட்டு படிக்கிறான். இவன் எதிர் காலத்துல என்னாகப் போறானோன்னு.

ஏங்க இது நல்ல நேரான எண்ணமா எதிர் மறை எண்ணமா ?


நன்றி அதீதம்

No comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்