ஒன்றைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைப்பது. அது நமக்கு கெடுதல் செய்யும்
அல்லது நன்மை செய்யும் என்று தொடர்ந்து அது பற்றியே யோசிப்பது. நல்லதோ
கெட்டதோ அதைப் பற்றிக் கொண்டு விட மறுப்பது. உண்டுறங்கி திண்டு பேண்டு
புணருங்காலையும் அதையே நினைப்பது - மன நோய்க்கூற்றின் ஆரம்பக் கட்டம்
என்கிறது மருத்துவம்.
திரும்பத் திரும்ப கைகளைக் கழுவிக் கொண்டே
இருப்பது, பூட்டிய பூட்டை திரும்பத் திரும்ப இழுத்துப் பார்ப்பது, யார் எது
சொன்னாலும் அதில் ஏதோ என்னைக் குறித்து தவறாக பேசுகிறார்கள் என்று
யோசிப்பது, யார் எதை சொன்னாலும் அதில் தான் நினைத்த ஒன்றை மட்டுமே தேடுவது
என்று தொடர்கிறது இந்த நோயின் அறிகுறி.
சிலர் பிறக்கும் போதே இந்த
நோயுடனே பிறந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்திற்குறிய விஷயம். மூளைப்
பகுதியில் ஏற்படும் இரசாயன மாற்றமே இதற்கு காரணமாம். அந்த இரசாயணத்தை
சமநிலைக்கு கொண்டுவந்துவிட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும்
என்கிறார்கள்.
சில அறிகுறிகள் :
* மன அமைதிக்கு மிகவும் கஷ்டப்படுவது. தேவையற்ற எண்ணங்களோ, பிம்பங்களோ மனதில் தோன்றி வெளியேறாமல் மன அமைதியை குலைப்பது.
* சிறு சிறு அற்ப விஷயங்களைக் கண்டும் மனம் வருந்துவது.
* எப்போதும் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள அதீதப் பிரயத்தனம் செய்வது.
* ஏதோ ஒரு பயத்தினை மனதில் கொள்வது. அது நெருப்பாகவோ அல்லது கிருமியைப்
பற்றியதோ, நீரைப் பற்றியதோ, ஏதோ பயம் மனதில் எப்பொழுதும்
ஆட்கொண்டிருக்கும்.
* மனதுக்குள்ளேயோ அல்லது வாய்விட்டு உரத்தோ சில வார்த்தைகளை, வாக்கியங்களை அல்லது ஓசைகளை எழுப்பிக் கொண்டே இருப்பது.
* தான் சரி என்று நினைக்கும் வரை ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது.
* தான் நினைத்த வகையிலே தான் வேலை நடக்க வேண்டும். அப்படி இல்லையேல் அந்த
வேலையை தான் நினைத்த வகையிலே நடக்கும் வரை திரும்பத் திரும்ப செய்விப்பது.
* வழக்கமான தினவாழ்கை முறையில் சிறிது மாறுதல் ஏற்பட்டாலோ, தன்னுடைய "
பெர்சனல் ஸ்பேஸ் " க்குள் யாரேனும் உள்நுழைந்ததாக கருதியோ அடிக்கடி மனச்
சீற்றம் கொள்வது.
* யாரேனும் ஒருவரைப் பார்த்தால் அவரைப் போலவே நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பது
* தான் வாழும் சுற்றுப் புறத்தில் இருக்கும் பலவற்றை திரும்பத் திரும்ப
எண்ணிப் பார்ப்பது. அந்த எண்ணிக்கை மாறுபட்டால் அதனால் மன அழுத்தம்
கொள்வது.
* செய்த வேலையை திரும்பத் திரும்ப செய்வது, சரி செய்வது,
மீண்டும் செய்வது அதை மீண்டும் சரி செய்வது. எல்லாம் சரியாக இருக்கிறது
என்று தெரிந்த போதிலும் அதை மீண்டும் சரி பார்ப்பது. அது இன்னும் சரியாக
செய்யப்படவில்லை என்ற எண்ணம் எழும்.
* ஏதாவது ஒன்று பேசும் போதும் எழுதும் போதும் அல்லது நினைக்கும் போதாகிலுமாகட்டும் கெட்ட வார்த்தைகள் வலிய திணிப்பது.
*ஏதோ ஒன்றை திரும்பத் திரும்ப தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது.
* தான் சொல்ல நினைத்த ஒன்றை சரியாக சொல்ல இயலாமல் போவது. இப்படித்தான்
சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே பல முறை ஒத்திகைப் பார்த்தாலும் சொல்ல
வரும்போதும் தடுமாறி சொல்லாமல் விடுவது.
இந்த ஆரம்ப நிலை ஒன்றும்
வருந்த தக்க நிலை அல்ல. ஆனால் இது தொடர்ந்து கொண்டே போகுமானால் அது
மனநோயில் கொண்டு விடலாம். இதில் ஏதோ ஒரு அறிகுறி நம்மில் யாருக்கும்
இருக்கலாம். ஆனால் அது மனநோய் என்று அர்த்தம் ஆகிவிடாது. ஆனால் அந்த
அறிகுறி உங்களின் சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடும்போதோ அல்லது தொடர்ந்து
எப்போதும் இருக்கிறது என்று நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களோ
நினைக்கும் போது அதை சரி செய்ய முழுமனதுடன் முன் வந்தாலே போதும். அனைத்தும்
சுகமே.
ஒருத்தன் யாரையோ நினைச்சுட்டே இருக்கிறது வேறு. ஆனா
என்னையேன் நினைக்கவில்லை என்று ஒருத்தரை வற்புறுத்தறது வேறு இல்லையா ?.
ஒருத்தன் தன் காதலி கூட உக்கார்ந்து சாப்டுட்டு இருக்கான். அந்த காதலிக்கு
திடீர்னு புரையேறிட்டுது. உடனே காதலன் சும்மா இல்லாம நான் தான் திரும்ப
நினைச்சேன்னு சொன்னான். உடனே காதலிக்கு வந்ததே கோபம்...
உள்ளினேன் என்றேன் மற்று என்மறந்தீர் என்றென்னப்
புல்லாள் புலத்தக் கனள்.
என்னைய மறந்திருக்க அதனாலத்தானே திரும்ப நினைச்சிருக்க... என்னை மறக்கற
அளவுக்கு போயாச்சா அப்படின்னு கோச்சுக்கிட்டு போய்ட்டாங்களாம். இதுவும்
நோய் கூற்றில் வருமான்னா ? வரும் ஆனா அந்த நோய்க்கு வேற பேருங்க. அதுக்குப்
பேர் ஊடல். அதே போல ஒருவரின் பிரிவை நினைத்து நினைத்து வேதனைப் படுதலும்
இந்த நோய்க்கூற்றில் வராது.
வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ.
வெளியே போன கணவன் வீடு திரும்புவான்னு ஏதோ சத்தம் கேட்டா, உடனே கதவைத்
திறந்து பாப்பாங்களாம். அடடே அந்த சத்தம் அவர் வந்ததால வந்தது இல்லைன்னு
மறுபடி கதவடைப்பாங்களாம். இப்படி திறந்து மூடி திறந்து மூடி, விடியறதுக்கு
முன்னாடியே அந்த கதவின் மரத்தாலான குடுமி தேஞ்சுட்டதாம். இதெல்லாம்
ஏக்கம், கணவனைப் பற்றிய எதிர் பார்ப்பு. இதுவும் அதே நோய்க்கூறா என்றால்
இருக்கலாம். ஆனால் நாயகனைக் கண்டதும் உடனடியாக குணமாகக் கூடிய நோய். இது
தவறே இல்லை.
இப்படித்தான் பாருங்க ஒருத்தர் மருத்துவரிடம் சென்று முறையிட்டார்.
" டாக்டர்.. நான் எப்பவுமே என் மனசுக்குள்ள கிரிக்கெட் ஆடறதப் பத்தியே
நினைச்சுட்டிருக்கேன். நேத்து கூட பாருங்க சச்சின் டபுள் செஞ்சுரி
போடறதுக்குள்ள அவுட் ஆகிட்டார். ரொம்ப மனசு கஸ்டமாய்டுச்சு. பிரட்லீ
போட்ட ஸ்பீட்ல ஸ்டம்ப்பு அப்படியே எகிறிடுச்சு "
" அடடே.. கவலையே
வேண்டாம். சரி பண்ணிடலாம். அப்படி உக்காருங்க. இந்த தண்ணி கொஞ்சம் குடிங்க.
ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்தீங்கன்னா சச்சின் நூறாவது செஞ்சுரி
போடப் போறார். அது முடிஞ்சதும் உங்களை கவனிக்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டு
கண்ணை மூடிக்கிட்டாராம்.
8 comments:
அருமை.
நெறைய என்கிட்ட இந்தமாதிரி இருக்கு.. மாத்திக்கணும்.
இது போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர் ...எளிதில் சரி செய்துவிடலாம் ...பயனுள்ள தகவல் !
குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் டாக்டர் அலெக்சன் தேவசகாயம் இதுபோன்ற நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறார் .
//Blogger ராமலக்ஷ்மி said...
அருமை.//
நன்றி
//கோவி said...
நெறைய என்கிட்ட இந்தமாதிரி இருக்கு.. மாத்திக்கணும்.//
இது பெரிய விஷயமே இல்லை. நாம செய்யறதை உணர்ந்துட்டாலே தன்னால மாற்றம் வரும்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோவி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கூடன் பாலா.
//koodal bala said...
குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் டாக்டர் அலெக்சன் தேவசகாயம் இதுபோன்ற நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறார் .//
அவருடைய தொடர்பு விவரங்கள் தந்தால் இந்த கட்டுரையில் சேர்த்துவிடலாம். படிப்பவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
நன்றி
அருமை.
அக்குபஞ்சரில் கூட நல்ல தூக்கமும், மன அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. விஷயம் தெரிந்தவர்களிடம் சென்றால் பயன் கிடைக்கும். ஆழ்ந்த நிம்மதியான தூக்கமே பல வியாதிகளுக்கு முக்கியமான மருந்து.
Post a Comment