Saturday, March 12, 2011

சக்கரவியூகம் - 02



(சற்றே பெரிய கதையான இதன் முதல் பகுதி முந்தைய இதழில் வெளியாகியிருக்கிறது)

-04-
பதின்மூன்றாம் நாள் போர் தொடங்குவதற்கு ஆயத்தமாக இரத்தத்தை தன் உடலில் பூசிக் கொண்ட கதிரவனின் கரங்களுடன் காலை புலர்ந்தது. படைகளுக்கான வியூக ஆயத்தங்களை போர்த்தளபதியும், பாஞ்சாலியின் அண்ணனுமான திருஷ்டத்துய்மன் செய்துக் கொண்டிருந்தான். துரோணர் சக்கரவியூகத்தை வகுத்துக் கொண்டிருந்த அதே நேரம் அர்ஜுனன் கண்ணனின் பாசறைக்கு வெளியில் நின்று கண்ணனை அழைத்தான். "கண்ணா உள்ளே வரலாமா?"

அர்ஜுனனின் குரல் வழக்கத்தக்கு மாறாக சுரத்தின்றி ஒலித்தது. வாய் ஒப்புக்காக அனுமதி கேட்டாலும் தன் மைத்துனனின் குடில் என்ற உரிமையில் அர்ஜுனன் உள் புகுந்தான்.

"மாதவா, காலையில் இருந்தே என் இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது. தூதுவர்களின் செய்திப் படி திரிகர்த்த அரசன் சுசர்மன் என்னை அழிக்க சபதம் பூண்டுள்ளானாம். தவபலன் காரணமாக அவர்கள் என்னைத் தனித்துப் போரிட அழைத்தால் நான் மறுக்கக் கூடாது. அது என் காண்டீபத்துக்கு இழுக்கு. அந்த நேரம் பார்த்து என் அண்ணன் தருமனை துரோணர் பிணையாகப் பிடித்திடுவாரோ என்ற அச்சம் என்னுள் ஏற்படுகிறது. என் மனம் கலங்குகிறது கண்ணா"
"சரியாய் போனது போ. உனக்கு எத்தனை முறை உபதேசித்தாலும் தெளிவு வராது போலிருக்கிறது. மேலும் அர்ஜுனா, நானிருக்கும் வரை உங்கள் ஐவருக்கும் எந்த தீங்கும் நேரிடாது என்று சகதேவனிடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன். கலக்கம் வேண்டாம்." இதைச் சொல்லும் போதே கிருஷ்ணனின் சிரிப்பில் விஷமம் சேர்ந்தது.

"கண்ணா, இன்றைய போர்வியூகத்தை துரோணாச்சாரியர் சக்கர வியூகமாக வகுத்து இருக்கிறார். அதைப் பிளக்க நம்மில் நீயும் நானும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது. அபிமன்யூவிற்கு உடைக்கத் தெரியும். வெளிவரத் தெரியாதே. இந்த நேரம் பார்த்தா சுசர்மன் சபதம் போட வேண்டும். பாவி, அவனை நிர்மூலமாக அழித்து விடுகிறேன் பார்"

இத்தனை பேசியும் கண்ணனின் இதழில் குடி கொண்டிருந்த மௌனத்திற்கு அர்த்தம் தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுனன்.

"சரி, நீ தேரை ஆயத்தம் செய்து கொண்டு வா. அது வரை நான் சக்கரவியூகத்திற்கு மாற்று வியூகத்தை திருஷ்டத்தூய்மனிடத்தில் சொல்லி விட்டு வருகிறேன்" அர்ஜுனன் வெளியேறினான்.

சக்கர வியூகத்திற்கு எதிராக மகர வியூகம் அமைக்கப் பட்டது. இரண்டு செதில்களும் கால்களென நீண்டு, மீனின் தலையும் உடலும் வாலும் கொண்ட மகர மீனின் வடிவம் கொண்ட வியூகம் அது. சக்கர வியூகம் நகரும் போது இரண்டு கால்களும் சுழலும் சக்கரத்தின் இரண்டு புறம் பற்றிக் கொள்ள, தலைப்பகுதி சக்கரத்தின் வெளி ஆரத்தை உடைத்து உள் புகுவதற்கு வசதியாக வியூகம் வகுத்துக் கொடுத்தான் திருஷ்டத்துய்மன். அதையும் மீறி வெளி வரும் படைகளை அழிக்க, மீனின் வால் சுழன்று சுழன்று போரிடும்.

போர் ஆரம்பிப்பதற்கான சங்க நாதத்தை துரோணர் எழுப்பினார். அந்த சங்க நாதம் அடங்குமுன்னமே சுசர்மனின் தற்கொலைப் படை அர்ஜுனனை வலிய போருக்கு அழைக்க அவன் வேறு வழியின்றி சக்கர வியூகத்தை விட்டு ஐந்து காத தூரம் தள்ளிச் சென்று அவர்களுடன் போரிட வேண்டியதாயிற்று. அர்ஜுனன் இல்லாத பாண்டவப் படைகளை சக்கரம் சுழன்று சுழன்று தாக்கியது. மகரவியூகம் பல முறை உடைக்கப்படவும் திருஷ்டத்துய்மனின் திறமையான படை நடத்தலில் மீண்டும் உடைபட்ட வியூகத்தை சேர்த்து போரிட்டுக் கொண்டிருந்தாலும் படை சோர்வுற்றது. இப்படியே போனால் இன்னும் சிறிது நேரத்தில் பாண்டவர்களின் படை சக்கரவியூகத்தின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகிவிடும். மகரவியூகத்தின் வலது கால் பகுதியில் தருமன் நின்றிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக அபிமன்யூவும் மற்றும் பல மாபெரும் போர்வீரர்களும் நின்றிருந்தனர். துரோணரின் தேர்க் கொடி தருமனைக் குறி வைத்து விரைந்து கொண்டிருந்தது.

"அபிமன்யூ, இங்கே இருப்பவர்களில் உனக்கு மட்டுமே சக்கர வியூகத்தை பிளக்கும் யுக்தி தெரியும். ஆகவே நீ முன்னின்று வியூகத்தை உடைக்க வேண்டும். இல்லையேல் அர்ஜுனன் திரும்பும் போது இங்கிருக்கும் படை அனைத்தும் அழிக்கப் பட்டிருக்கும். இவர்களை நீ தான் காப்பாற்ற வேண்டும். செய்வாயா மகனே?" தருமனின் குரலில் வேதனை துளிர்த்தது.

"பெரியப்பா, மாமாவும் அப்பாவும் எனக்கு வியூகத்தை உடைத்து உள் புக மட்டுமே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் அதிலிருந்து மீளும் உபாயம் அறியேனே"

"அது பற்றி கவலைப்படாதே, அபிமன்யூ. நீ வியூகத்தை பிளந்த உடனேயே உன் பின்னால் அனைவரும் இடைவெளியின்றி உள் புகுந்துவிடுவோம். அனைவரும் சேர்ந்து வியூகத்தை சின்னா பின்னமாக்குவோம்"

"அப்படியே ஆகட்டும், பெரியப்பா"

அபிமன்யூ வியூகத்தை கவனித்தான். வழக்கம் போல் குதிரைப் படை, காலாட்படை, தேர்படை யானைப் படை என தனித் தனியாக இல்லாமல், துரோணர் தந்திரமாக வியூகம் அமைத்திருந்தார். ஒரு யானைக்கு ஐந்து தேர்களும், ஒவ்வொரு தேருக்கும் பத்து குதிரை வீரர்களும், இருபது காலாட்படைகளும் என்று சிறு சிறு குழு படைகளாக மாற்றி வியூகத்தை நிரப்பி இருந்தார். இந்த வியூகத்தை உடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. இந்த வியூகத்தை வழக்கமான மகர வியூகத்தால் எதிர் கொள்வது சிரமம். வியூகத்தை சற்று மாற்ற வேண்டும்.

"பெரியப்பா, நாம் வியூகத்தின் தலைப் பகுதிக்குப் போக வேண்டும். நீங்களும், பெரியப்பா பீமரும், இரண்டு சித்தப்பாக்களும் என் பின் அணிவகுத்து நில்லுங்கள். யானைப் படையை முன்னால் நிறுத்த வேண்டாம். முதலில் அதிவேக குதிரைப் படைகளைக் கொண்டு வாருங்கள். பதினைந்து குதிரைக்கு இரு யானை பின் புறமும், நான்கு தேர்ப் படைகள் இரண்டு புறமும் நிற்கட்டும். வியூகத்தின் முறையை மாற்ற வேண்டும். இந்த வியூகம் மூன்று முகம் கொண்ட ஊசி வியூகமாக மாறட்டும். எதிரில் நிற்கும் யானைகளில் பெரிய யானைகள் ஊசி முனைக்கு வரும் போது தாக்குங்கள். மாமாவும் அப்பாவும் சொல்லிக் கொடுத்த அத்திரங்கள் அனைத்தும் இன்று எதிரிகளை நாசமாக்கச் செலுத்தப் போகிறேன். நடுப்புறத்தில் நான் அதிக சேதாரம் ஏற்படுத்தி பிளவு உண்டு பண்ணியதும் என் பின்னே அனைவரும் வந்துவிடுங்கள். மிக முக்கியமாய் உள் நுழைய அதிவேகம் தேவை. இல்லையேல் சக்கரம் மறுபடி மூடிக் கொள்ளும்."

தருமனின் திறந்த வாய் மூடுவதற்கு சற்று தாமதமானது. பதினைந்து வயது சிறுவனா இவன்.? என் தம்பி அர்ஜுனனை விட மிகச்சிறந்தவனாக வருவான் இவன். தருமன் அபிமன்யூவை ஆரத்தழுவினான். அபிமன்யூவின் விற்பிரயோகத்தாலும் போர் முறையாலும் சக்கரத்தில் பெரிய விரிசல் கண்டது. அந்த விரிசல் மூடுவதற்கு முன் சட்டென்று உள் நுழைந்தான் அபிமன்யூ.

"பார்த்தாயா துரியோதனா, பாண்டவர்களைக் காப்பது அர்ஜுனன் மட்டும்தான் என்று நினைத்தது எவ்வளவு பொய்த்து விட்டது. ருத்திரனின் மறு அவதாரம் போல் உள் நுழைந்த இந்த சிறுவனின் போர்வன்மையைப் பார். என் மனம் நெகிழ்கிறது. அவனைக் கட்டித் தழுவ என் கரங்கள் துடிக்கிறது. இவன் பத்து அர்ஜுனர்களுக்கு ஈடானவன்."

துரோணரின் பேச்சு துரியோதனனுக்கு வேம்பாய் கசந்தது.

"பிராமணரே, உமது தொழிலான புரோகிதம் செய்வதை விட்டு நீர் போரிட வந்தது தவறுதான். இப்போது உணர்கிறேன்."

உயிர் பிளக்கும் சொல்லம்புகள் வெளிப்பட்டன. துரோணர் மவுனித்தார். பின் மேலும் உக்கிரமாய் பாண்டவர்களைத் தாக்க முற்பட்டார். அதே நேரம் உடைந்திருந்த அந்த வாயிலில் தருமனும் மற்றவர்களும் நுழைய முற்பட்ட போது உடைந்த மதகில் இருந்து வெளிவரும் வெள்ளம் என ஜெயத்ரதன் பாய்ந்து வந்து வாயிலை மூடினான். அவன் பெற்ற வரமும், அபிமன்யூவின் வேகத்துடன் ஈடு கொடுக்க முடியாமையினாலும் அபிமன்யூ தவிர்த்து மற்றவர்கள் வெளியே நிற்க நேரிட்டது. சற்றே ஒட்டியிருக்கும் எண்ணைப் பசைக் கொண்ட விளக்கின் திரி பிரகாசிப்பது போல அன்று ஜெயத்ரதன் அதி அற்புதமாய் போரிட்டு பாண்டவர்கள் நால்வரையும் வெளியே நிறுத்தினான்.

சக்கரம் உள்ளே மெல்ல இறுகியது. அபிமன்யூ உள்ளே தனியனாய் சிக்கினான். அவனின் போர் வன்மைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கர்ணன் பலமுறை தலை தெரித்து ஓடினான். கர்ணனே ஓடியதைக் கண்டு மற்றவர்களும் சிதறினர்.

"போதும் ஆச்சாரியரே. உமது சக்கரவியூகத்தின் மகிமையைக் கண்ணார காண்கிறேன். இதை அழிக்க ஒரு சிறுவன் போதும் போலிருக்கிறது. இன்றே என் தோல்வி கிட்டிவிடும் என்றே நினைக்கிறேன். ஒன்று உங்கள் அம்பினால் அவனை அழியுங்கள். அல்லது அந்த அம்பினை என் மீது தொடுங்கள்" என்று மார்பைத் திறந்து கொண்டு நின்றான் துரியோதனன்.

"துரியோதனா துரியோதனா, எத்தனை முறைச் சொல்வது? அவனை சிறுபயல் என்று நினைத்து ஏளனம் செய்கிறாய். பார்த்தாயா உன் செல்ல நண்பன் தலை தெறித்து ஓடியதை. அவனை நேர்வழியில் வெல்ல முடியாது."

"இந்தப் படைக்கும், நாட்டுக்கும் தலைவன் நான் ஆணையிடுகிறேன். அவனை அதர்மவழியிலாவது நீங்கள் கொன்றே தீர வேண்டும். இது என் கட்டளை" உத்தரவிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான் துரியோதனன்.

என்ன ஒரு வாழ்க்கை. தின்ற சோற்றுக்கு தருமம் மீறுவதா? இதனால் எனக்கு ஸ்வர்கம் கிட்டுமா? என்று நினைத்துக் கொண்டு கையில் இருந்த தனுசை தேர்த்தட்டி வீசி எறிந்தார் துரோணர்.

"என் பெரியம்மாவை துகில் பிடித்து இழுத்தவனல்லவா நீ, இன்றோடு உன் ஆயுள் முடிந்திருக்கும் கீழ்மகனே துச்சாதனா, என் பெரியப்பாவின் சபதப் படி நீ அவர் கையால் கொல்லப்படவேண்டும். என் கண்ணில் படாமல் தூரம் ஒதுங்கிப் போ"

அபிமன்யூவின் அம்புகளும் வார்த்தைகளும் துச்சாதனனை துரத்தியது. கௌரவர்களில் அதி சிறந்த பல போர்வீரர்களும் எதிர் கொண்டு நிற்க முடியாமல் தடுமாறுவதைக் கண்டார் துரோணர். தானும் எதிர்த்து நிற்க இயலாமல் பலமுறை அவனிடம் இருந்து விலக நேரிட்டது. இன்னும் சிறிது நேரம் விட்டால் இவன் படைகளை நிர்மூலமாக்கிவிடுவான் என்று உணர்ந்தார்.
"கர்ணா, நீ அவன் பின் நின்று சாரதியையும், குதிரைகளையும் அழித்து விடு. பின் அவனுடைய வில் நாணை அறுத்து விடு. மற்றவர்களும் அவனை வட்டமாகச் சூழ்ந்துக் கொண்டு தாக்குங்கள் "

துரோணரின் குரலில் இதுவரையில் காக்கப்பட்டு வந்த போர் தர்மம் காற்றில் பறந்துகொண்டிருந்தது. வில்லிழந்து, அபிமன்யூ வாளெடுக்க அதையும் பின்னின்று அழித்தான் கர்ணன். தேர்ச்சக்கரத்தைக் கொண்டு பிரளயத்தின் நாயகன் போல் அனைவரின் மீதும் பாய்ந்தான் அபிமன்யூ. ஏற்கனவே பலருடன் போரிட்டு சோர்ந்திருந்த அந்த நேரத்தில் அவனுக்கு வெளிச் செல்வதற்கான உபாயம் தெரியவில்லை. அப்படிச் செல்லவும் அவன் விரும்பவில்லை. வீரச்சுவர்கத்தை வேண்டி நின்றான். ஒருவனை பல பேர் முன்னின்றும் பின்னின்றும் தாக்க அபிமன்யூ வீழ்ந்தான். தன் உயிர் பிரியும் முன் துரோணரைப் பார்த்து அலட்சியமாய் சிரித்தான், அச்சிரிப்புடன் உறைந்தான். அந்த சிரிப்பு, துரோணர் மீது அபிமன்யூ விட்ட பல அம்புகளை விட அதிக சக்தி வாய்ந்ததாய் சென்று இதயத்தை தாக்கியது. விதி தன் சக்கரத்தை உருட்டிக் கொண்டு துரோணருக்கு முன்னால் சென்று போர் களத்தில் ஒரு பக்கத்தில் காத்திருந்தது.


-5-
"என்னைக் கொன்று விடு அர்ஜுனா, அபிமன்யூவின் மரணத்திற்கு முழு காரணமும் நான் தான்" தருமர் புலம்பிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் நீர் சூழ்ந்திருந்தது. தருமரைச் சுற்றி இருந்தவர்களின் முகமும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால் அர்ஜுனனின் முகம் இறுகி இருந்தது. சோகத்தையும் மீறிய வெறி அவனுள் புகுந்திருந்தது.

" நீங்கள் ஏன் அபிமன்யூவுடன் உள் நுழையவில்லை"

"ஜெயத்ரதன் தனக்கு கிடைத்த வரத்தின் வலிமையால் எங்களை தடுத்து நிறுத்தி விட்டான்"

"தருமண்ணா, நீங்கள் ஏதும் பேசாதீர்கள். உங்களின் தருமத்தை என் உயிர் கொடுத்தாவது காப்பது என்று இருந்தேன். எங்களை விட உங்களுக்கு அதுமட்டுமே அல்லவா முக்கியம். ஆனால் பாவம், அபிமன்யூ அதற்கு மாற்றாக சென்று விட்டான். இத்தனை பேர் இருந்தும் என்ன பயன்.? உலகத்தின் ஒப்பற்ற வீரனைக் கொன்றுவிட்டீர்கள்"

"அந்த ஜெயத்ரதன்தான்..." பீமன் இழுத்தான்.

"ஜெயத்ரதன் ஜெயத்ரதன். அந்தக் கோழை நிறுத்தினானாம், இவர்கள் நின்றார்களாம்"

"சினம் அடங்கு பார்த்தா. அவன் தன் வலிமைக் கொண்டு நிறுத்தவில்லை. உங்களைப் பழி தீர்க்க சிவன் தந்த வரம் கொண்டு நிறுத்தினான்."

"கிருஷ்ணா, பரந்தாமா, உள் சென்றது சிறுவன் என்றும் பாராமல், அவனை அதர்மவழியில் கொல்ல வழி வகுத்த ஜயத்ரதனை நாளை போர் முடியும் முன் கொன்று விடுவேன். ஜெயத்ரதா நீ அழிந்தாயடா.. அப்படி கொல்லாமல் போனால் தீ மூட்டி, காண்டீபத்துடன் நான் அதில் இறங்குவேன். இது எம் தேவி பாஞ்சாலி மீது ஆணை. என்னுயிர்த் தோழன் கண்ணனின் மீது ஆணை. என் உயிருக்கும் மேலான இந்தக் காண்டீபம் மீது ஆணை."

ஊழித்தீயென அவன் ஆணையிட்டு காண்டீவத்தின் நாணைச் சுண்டியது எட்டு திக்கும் எதிரொலித்தது. கௌரவர்கள் படையிலும் கூடத்தான். அர்ஜுனனின் சபதம் கேள்வியுற்றதும் ஜயத்ரதன் தன் நாடு திரும்பத் தலைப்பட்டான். துரோணரும் மற்றவர்களும் தூண்டியதன் பேரில் போர்க்களம் புக ஒப்புக்கொண்டான் ஜயத்ரதன். மறுநாள் துரோணர், ஜயத்ரதனை பன்னிரண்டு காததூரத்தில் நிறுத்தினார். இருந்தும், கண்ணனும் அர்ஜுனனும் தீயும் காற்றும் சேர்ந்து வனத்தை எரிப்பதைப் போல் கௌரவப் படைகளை துவம்சம் செய்துக் கொண்டு ஜயத்ரனை நெருங்கிக் கொண்டிருந்தனர். கண்ணனின் தந்திர மாயைகளும், அர்ஜுனனின் வீரத்தாலும் ஜெயத்ரதன் அழிக்கப்பட்டான். துரியோதனனின் கோபத்தால், வழக்கத்தை மீறி இரவிலும் போரிட உத்தரவிட்டார். பெரும் சேதத்தில் முடிந்த போரில் மறுநாள் போருக்கு முன் சற்று ஓய்வு அனைவருக்கும் தேவைப்பட்டது.

"அஸ்வத்தாமா.. அஸ்வத்தாமா"

துரோணரின் குரல் அவர் குடிலைத்தாண்டி வெளியே கேட்டது. பதில் ஏதும் வரவில்லை. வழக்கமாக அவர் குரல் கேட்டதும் உடன் வருபவன்தான் அஸ்வத்தாமன். ஆனால் இப்போது வரவில்லை. சட்டென்று அவருக்கு உரைத்தது. இந்த நேரத்தில் அவன் துரியனுடன் இருப்பானல்லவா.? அபிமன்யூ வதத்திற்கு அப்புறம் அவன் துரியோதனனுடன்தான் அதிகம் இருக்கிறான்.

"யாரங்கே?"

அவர் குரல் கேட்டதும் குடிலின் வெளியே இருந்த காவலன் உள்ளே வந்து தலை குனிந்து நின்றான். விடிவதற்கு இன்னும் இரண்டு நாழிகை மட்டுமே இருந்தது.

"நான் உடனடியாக துரியனையும் அஸ்வத்தாமனையும் பார்க்க வேண்டும். வரச்சொல்." உத்தரவு பிறந்தது.

துரோணரின் மனத்தின் வலி அவரைத் தூங்க விடாமல் அலைகழித்துக் கொண்டிருந்தது. அதுவும் நேற்று இரவும், இன்று காலையிலும் துரியோதனன் செலுத்திய சொல்லம்புகள் அவரைப் பாதி கொன்றுவிட்டிருந்தது. பல ஆயிரம் சேனைகளுக்குப் பின்னால் பதுக்கப்பட்டிருந்த ஜயத்ரதனை கண்ணனின் சூழ்ச்சியும் அர்ஜுனனின் அம்புமா கொன்றது? அவன் அபிமன்யுவை பின்னின்று தாக்கியதற்கு உதவிய பாவமல்லவா முன்னின்று அவனைக் கொன்றது. அதையேன் துரியன் உணர மறுக்கிறான்?

சக்கரவ்யூகமும் அதை உடைத்து உள் நுழைந்து படைகளை சிதறடித்த அபிமன்யூவின் வீரமும் அவரின் கண்கள் முன் நிழலாடியது. எத்தனை அற்புதமாகப் போராடினான் அந்தச் சிறுவன்.

தன்னால் அமைக்கப்பட்ட அந்த சக்கர வியூகத்தின் முறை பற்றியும் அதை உடைத்து உள் புகுவதோ அல்லது அதில் இருந்து மீள்வதோ பீஷ்மரும், தானும், கிருஷ்ணனும், அர்ஜுனனையும் தவிர்த்து போரில் பங்கு பெறாத கிருஷ்ணனின் மகன் அநிருத்தனுக்கு மட்டுமே தெரியும், வேறு யாருக்கும் தெரியாதென்று நினைத்தது தான் அந்த வியூகத்தை உருவாக்கினார். ஆனால் தன் தந்தையும் மீறிய இலாகவத்துடன் அல்லவா அபிமன்யூ அந்த வியூகத்தையே உடைத்தான். உள் நுழைந்ததும் அன்றி அவனழித்தப் படைகளின் எண்ணிக்கைக் கண்டு தான் அஞ்சியது குறித்து அவர் தற்போது சற்றே வெட்கினார். ஏழு மகாரதர்கள் எனப்படும் மாபெரும் படைத்தலைவர்கள் சூழ்ந்திருந்து தாக்கியும் ஜயத்ரதன் பின் நின்று அபிமன்யூவைத் தாக்கியும், அவன் வில் கர்ணனால் துண்டிக்கப்பட்டும் கூட அவன் தாக்குதலின் வீரியத்தைக் குறைக்க இயலவில்லை. அவன் தேர்த்திகிரியைக் கொண்டு தன் கடைசி நிலையிலும் விடாமல் ஏழு மகாரதர்களையும் தாக்கி அழிக்கத் துணிந்தவனை அதர்ம வழியில் கொல்வதற்கு தானும் உடந்தையாய் இருந்ததை நினைத்து தன் உயிர் மீது வெறுப்புற்றார்.

"ஆச்சாரியர் அழைத்தீர்களாம்."

துரியோதனன் உள் நுழைந்தான். அவன் குரலின் கோபம் இன்னும் குறையவில்லை என்பது துரோணருக்குத் தெளிவாகப் புரிந்தது. துரியோதனனின் பின்னால் ஏதும் பேசாமல் அஸ்வத்தாமன் நின்றுக் கொண்டிருந்தான்.

"பாண்டவர்கள் அழிவைத் தவிர்த்து வேறெதுவும் பேச நான் சித்தமாயில்லை ஆசார்யரே" துரியனின் வார்த்தைகளில் இயலாமையும் கோபமும் கொப்பளித்தது. இவர் பாண்டவர்களை அழிப்பார் என்ற நம்பிக்கை சுத்தமாக அவனிடம் இல்லை.

"படையில் பாதிக்கும் மேல் அழிக்கப்பட்டுவிட்டது ஆச்சாரியரே.. உங்களால் பாண்டவர்களை அழிக்க முடியாவிட்டால் சொல்லுங்கள். என் நண்பன் கர்ணனைக் கொண்டு அவர்களை தூசு போல ஊதிவிடுவேன்."

துரோணாச்சாரியார் பலத்தக் குரலில் சிரித்தார். அந்தச்சிரிப்பில் இருந்த அதீதக் கோபம் துரியோதனனை அச்சங்கொள்ள வைத்தது. பின்னிருந்து அஸ்வத்தாமனும் துரியோதனனை அமைதிப் படுத்தவாய் தோள் பிடித்து அழுத்தினான்.

துரியோதனனின் வார்த்தையின் கடுமை சற்றே குறைந்தது.

"ஆச்சாரியார் குறைந்த பட்சம் தருமனையாவது சிறைப் பிடித்துத் தாருங்கள். அவனை மீண்டும் சூதாடச் செய்து காட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். அப்புறம் போர் நின்றுவிடும்"

துரோணர் தன் சிரிப்பை நிறுத்தினார்.

"உண்மையாகவா துரியோதனா? தருமன் சிறைப்பட்டால் போதுமா?"

"ஆம், ஆச்சாரியரே. அது தான் எனது விருப்பம். பாண்டவர்கள் அழிவை நீங்கள் விரும்பாதபோதில் எனக்கு வேறு வழியும் தோன்றவில்லை."

"நாளை நிச்சயம் தருமன் பிடிபடுவான், துரியோதனா.. மகிழ்ச்சியான கட்டளை சொன்னதற்கு நான் உன்னை வாழ்த்துகிறேன்"

"ஆச்சாரியரே, உங்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம். ஒருவேளை தருமனை சிறையெடுக்க முடியாதுபோனால்? "

"பாண்டவர்கள் படையும் பாண்டவர்களும் நாளை அழிந்தார்கள் எனக் கொள் துரியோதனா "

"ஆச்சாரியரே.."

துரோணரின் முகம் இறுகியது.

"வேறெதும் பேசத் தேவையில்லை, துரியோதனா.. நீ போகலாம்."

துரியோதனனும் அஸ்வத்தாமனும் குடிலை விட்டு வெளியேறினர். துரோணரின் கண்களில் அழிவின் சக்தி ஊழித்தாண்டவம் ஆடத் தொடங்கியது. அவரது கை இதுவரை இந்தப் போரில் உபயோகப் படுத்தப்படாத பேரழிவு ஆயுதத்தை மெல்லத் தடவிக் கொடுத்தது. அவர் வாய் மெல்ல அதன் பெயரை உச்சரித்தது.

"பிரம்ம தண்டம்"

-6-
சுற்றிச் சுழலும் சக்கர வியூகம் போன்றதே இந்தப் போர். இதன் அச்சாய் நிற்பவன் இதோ இந்த மாயக்கண்ணன். அவனின்றி ஏதும் நடந்திடாதே. பதினைந்தாம் நாள் போர் இது. ஏனோ இன்றே என் கடைசி நாள் என்று தோன்றுகிறது. முடிந்தால் தருமனை பிணையாகக் கொடுப்பேன். அல்லது இன்றே என் வாழ்வு முடியட்டும். துரோணரின் எண்ணம் அலை பாய்ந்துக் கொண்டிருந்தது. கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போல துரோனணர் எதிரிகளைச் சுட்டெரித்தாலும் அவரின் மனதில் அபிமன்யூவின் சிரிப்பு வேதனையைக் கூட்டிக் கொண்டிருந்தது. தன் மகனை இழந்த அர்ஜுனனின் துயரம் மனதில் எழுந்தது. அது அஸ்வத்தாமனை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தது. நடு நடுவே துரியோதனனின் சுடு சொற்கள் அவரை வதைத்துக் கொண்டே இருந்தன. ஏற்கனவே சோர்ந்திருந்த படைகளை அழித்து முடித்திடவேண்டும் என்ற வேகத்தில் அவர் சுழன்று சுழன்று போரிட்டாலும் அர்ஜுனனின் தீரம் அவரை தருமனின் பக்கம் நெருங்க விடாமல் தடுத்ததோடு இல்லாமல் கௌரவர்களின் படைகளை பலமாக அழித்துவிட்டிருந்தது.

இனியும் பொறுக்க இயலாது. செஞ்சோற்றுக் கடன் முடித்தாக வேண்டும். எதிர் நிற்பவன் என் பிரிய அர்ஜுனனாகவே இருக்கட்டும், அவன் என் எதிரி. அவனிடம் நான் அறிந்த எல்லா அஸ்த்திரப் பிரயோகமும் அளித்திருந்தேன். மிச்சமிருப்பது பிரம்ம தண்டம் மட்டுமே.

பிரம்ம தண்டம், வழிவழியாய் துரோணரின் முன்னோர்களால் தங்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. காமதேனுவை அபகரிக்க வந்த அரசனையும் அவன் பெரும்படையும் எதிர் கொண்ட வசிட்டன் உபயோகித்த ஆயுதம். துரோணரின் தந்தை பரத்வாஜர் மூலமாக இன்று இவரிடம் கிடைத்திருக்கிறது. பார்ப்பதற்கு ஊன்றுகோல் போலக் காணப்படும் அதில் பல அத்திரங்களும் அடக்கம். பிரம்மாஸ்த்திரம் முதற்கொண்டு அனைத்து ஆயுதங்களையும் கொண்டது பிரம்ம தண்டம். அதை எதிர்த்து அழிக்கும் வலிமை கண்ணனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அவன் இந்தப் போரில் பங்கேற்க மாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறான்.

துரோணர் பிரம்ம தண்டத்தை உபயோகிப்பதற்கான மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்.

"அர்ஜுனா ஆபத்து. பிரம்ம தண்டம் பயன்படுத்தப்பட்டால் போர் இன்றே முடிந்து போகும். அவரைத் தடுக்க ஒரே வழி, அவரைத் தானாகவே ஆயுதத்தை கீழே போட வைப்பதுதான்"

கண்ணன் பதைத்தான்.

"என்ன செய்வதென்று சொல் கண்ணா"

"அவரின் தற்போதைய மனநிலைக்கு அவர் அஸ்வத்தாமன் இறந்தான் என்ற செய்தி கேட்டால் மட்டுமே ஆயுதம் கீழே வைப்பார்"

"ஆனால் அதெப்படி கண்ணா.. கண்ணுக்கெட்டிய தூரத்தில் எங்கும் அஸ்வத்தாமன் இல்லையே"

"துரோணர் உன் கண்ணெதிரெ இருக்கிறார். அவருக்குத் தேவை அஸ்வத்தாமன் இறந்தான் என்ற வார்த்தை மட்டுமே. அதை நீ சொல்ல வேண்டும் " "அதென்ன பிரமாதம் நான் சொல்கிறேன் கண்ணா " பீமன் ஓடிவந்தான்.

"பொய் சொல்வது அதுவும் குருவிடம் பொய் சொல்வது தீநரகத்தை வலிய அழைப்பதற்கு ஒப்பானதல்லவா? மாபெரும் பாவத்தை செய்யத் தூண்டுகிறாயே கண்ணா", தருமம் பேசியது.

"தருமநந்தரே.. தருமநந்தரே, நேரம் காலம் தெரியாமல் தருமம் பேசுகின்றீர். அபிமன்யூ நேர்வழிப் போரிலா அழிந்தான்? அதை செய்தது உம் ஆச்சாரியர் அல்லவா ? அவருக்குத் தெரியாத தருமமா? ஏன் அப்படிச் செய்தார்?"

"அவர் செய்தார் என்பதற்காக தருமத்தை மீற முடியுமா கண்ணா" கண்ணன் கவலையுடன் துரோணர் பக்கம் பார்த்தான். துரோணர் ஏறக்குறைய பிரம்ம தண்டத்தை எய்வதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் செய்து முடித்துவிட்டிருந்தார்.

"தருமா, விரைவாகச் செல். அதோ அங்கே நிற்கிறதே ஒரு யானை. அதன் பெயரும் அஸ்வத்தாமன் தான். அதைக் கொல், தாமதிக்க நேரமில்லை"

"அஸ்வத்தாமா அழிந்தாயடா" துரோணருக்கு கேட்கும் வகையில் கூக்குரலிட்டுக் கொண்டே பீமன் விரைந்தான். துரோணரின் மனம் துணுக்குற்றது. சுற்றிலும் பார்த்தார். அஸ்வத்தாமனின் தேர்க் கொடி எங்கும் காணப்படவில்லை. அவரின் மந்திர உச்சாடனம் தடைப்பட்டது.

"துரோணரே அஸ்வத்தாமன் அழிந்தான். அஸ்வத்தாமன் அழிந்தான்" துள்ளலுடன் குதித்த பீமனை அவர் மனம் நம்ப மறுத்தது. அவர் அர்ஜுனனை நோக்கினார். அர்ஜுனன் தலை கவிழ்ந்திருந்தான். ஒருவேளை நண்பனின் மரணம் அவனை துக்கம் கொள்ளச் செய்ததோ. சத்தியசீலன் தருமனைக் கேட்போம் என்று தேரைத் தருமனிடத்தில் செலுத்தச் சொன்னார். பிரம்ம தண்டம் இன்னும் விசத்தைக் கக்குவதற்கு ஆயத்தமாகவே இருந்தது.

"தருமா, யார் சொல்வதையும் நான் நம்ப மாட்டேன். நீ சொல். அஸ்வத்தாமன் இறந்தானா? "

தருமன் கண்ணனைப் பார்த்தான். அபிமன்யூவின் முகம் மனதில் நிழலாடியது. அவர் மனம் இறுகியது.

"ஆம், ஆச்சாரியரே..."

குரல் உயர்த்தி தருமர் கூறினார்.

"அஸ்வத்தாமன் இறந்தான்.. அது ஒரு யானை" என்றார்.

அஸ்வத்தாமன் இறந்தான் என்ற வார்த்தைகளுக்கு அடுத்து துரோணரின் காதுகளுக்கு வேறு வார்த்தைகள் விழவில்லை. அதோடு தருமனின் வாக்கியத்தின் இரண்டாவது பகுதியை கண்ணனின் சங்கநாதமும் கேட்கவிடாமல் செய்தது. அவர் கண்கள் அர்ஜுனனை நோக்கியது. அவனிடம் மன்னிப்புக் கோரும் வகையில் தலை தாழ்த்தினார். பிரம்ம தண்டத்தை தூளாக உடைத்தார். தன் கையில் இருந்த வில்லை தேர்த்தட்டில் வீசி எறிந்தார். அம்புகளைப் பரப்பி அதன் மீதமர்ந்தார். அவர் மனதில் அபிமன்யூவின் சிரிப்பு உறுத்தியது. மனமடக்கி இறுதி யோகத்தில் அமர்ந்தார். வாளெடுத்து அவர் தேரிலேறிய திருஷ்டத்துய்மன் அவர் தலையைக் கொய்தான். தனுர்வேதத்தின் அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்த துரோணரின் உடலில் இருந்து யாவரும் காணும் வண்ணம் எழுந்த ஜோதி ஒன்று மெல்ல மெல்ல வானுயர்ந்தது.

வழக்கம் போல அனைத்தையும் பார்த்துக் கொண்டு காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது இன்று வரையிலும்.
(முற்றும்)


நன்றி அதீதம் : http://pazasu.atheetham.com/feb2/chakar.htm

Friday, March 11, 2011

சக்கரவியூகம் - 01




-1-

அடர்ந்த வனாந்தரத்தின் நடுவே, சலசலத்து ஓடும் நதியின் கரையில், அந்த ஐந்து குடில்களும் அமைந்திருந்தது. அவிழ்த்து விடப்பட்ட ஒரு குதிரையின் பக்கத்தில் நடுத்தர வயதுடைய ஒரு மனிதனும், அவனது இளம்பிராயத்தவன் போலவே ஒரு இளைஞனும் நின்றிருந்தனர். இடுப்பில் வரிந்துக் கட்டப்பட்டிருந்த உடையும், முகத்தில் இன்னும் மறைந்திடாத பால்வண்ணமும், தேகத்தின் வனப்பும் அந்த இளைஞனை பேரழகனாகக் காட்டியது. பதினைந்து பிராயங்கள் தாண்டி இருக்கும். விரைவில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாய் அவனிடத்தில் காணப்பட்டது.

"அடங்க மறுக்கும் குதிரையை அடக்கிக் காட்டு. குதிரையின் சுழியங்கள் நன்கு பழக்கப்பட்டால் எந்த வித குதிரைகளும் அடங்கிப் போகும். இதுவரை நீ எத்தனை குதிரை அடக்கி இருந்தாலும் இந்த உயர்வகைக் குதிரையை அடக்குவதில் தான் உன் திறமையை நான் காணப் போகிறேன். உனக்கான இன்றையப் பயிற்சி இதுதான். "

அந்த இளைஞனின் தந்தைக் கூறுவது காதில் விழுந்தாலும், அவன் கவனம் முழுதும் எதிர் நிற்கும் புரவியின் மீதே இருந்தது. அது அவன் தந்தையின் குதிரை. அவன் தந்தையைத் தவிர யாருக்கும் கட்டுப்படாதது. அந்த இளைஞன் சட்டென்று தாவி ஏறி அந்தப் புரவியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து தன் வலிமையால் அதை அசையவொட்டாமல் நிறுத்தினான். பின் தந்தையை வெற்றி மிதப்புடனும், ஒரு சிறிய அலட்சியத்துடனும் நோக்கினான். அந்த ஒரு வினாடியில் குதிரை அவனைப் புரட்டிக் கீழே தள்ளிவிட்டுவிட்டு அவன் தந்தையின் அருகே சென்று நின்றுகொண்டது.

"இந்த அலட்சியம் தவறு அபிமன்யூ. வெற்றிக்கு அப்புறம்தான் அதிக நிதானம் தேவை. நிதானம் தவறும் போது எதிரி அந்த இடத்தைக் குறிவைத்து தாக்குவான். மேலும் குதிரைகளிடம் உள்ள சுழிகள், நிறம், உயரம், நீளம், பருமன், வால், கால், கழுத்து போன்றவற்றைக் கொண்டு அந்த குதிரை ராசியானதா, அதன் குணம் என்ன, ஜாதி என்ன, எப்படிப்பட்ட ஓட்டம் கொண்டது என்பதெல்லாம் கணிக்கப்படவேண்டும். ஒரு சத்திரியனுக்கு இதையெல்லாம் கணிக்கும் அசுவ சாத்திரம் கை கூடி இருக்க வேண்டும். அவன் போர் வாழ்க்கை அவன் ஏற்கும் குதிரையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது "

குதிரையை தடவிக் கொண்டே மேலும் சொன்னான் அர்ஜுனன்.

"அபிமன்யூ, உனக்கு வீரம் இருக்கும் அளவிற்கு தேவையான பொறுமையும், அதை செயல் படுத்தும் விவேகமும் இன்னும் கைகூட வேண்டும். குதிரையை பழகும் முன் குதிரையைப் பற்றி நன்கு அறியாமல் அதன் மீது கை வைக்கக் கூடாது. குதிரைக்கு மட்டுமல்ல இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.."

"ஆகட்டும் தந்தையே. குதிரைகளை எப்படி பழக்குவது என்று சொல்லுங்கள்."

"நல்ல உயர்தரக் குதிரைக்கு நான்கு முழங்கால்களுக்குக் கீழேயும், நெற்றியிலும், ஆக மொத்தம் ஐந்து இடங்களில் வெள்ளையாக சுழிகள் இருக்கும். இந்த இலட்சனம் உள்ள குதிரை எளிதில் யாருக்கும் அடங்காது. ஆனால் பழகினவனை தன் உயிர் போகும் வரை காப்பாற்றுவதில் குறியாக இருக்கும். அதே போல் அதன் எஜமானன் இறந்து போனால் அந்த வேதனையிலே அதுவும் இறந்து போகும்."

அர்ஜுனன் கைகள் குதிரையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

"குதிரை என்பது நம்முடன் பழகும் நண்பனைப் போன்றது அபிமன்யூ. அதே நேரம் அதற்குறிய அத்தனை உபசாரங்களும் நாம் செய்தாக வேண்டும்."

உணர்ந்தாற் போல தலையாட்டினான் அபிமன்யூ. அர்ஜூனன் தொடர்ந்து குதிரையை பழக்கும் பல வழிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தான்.

"இனி இந்தக் குதிரை உன்னுடையது அபிமன்யூ. நான் சொன்ன முறைகளைக் கொண்டு அந்த குதிரையிடம் பழகு. எல்லாம் விரைவில் கை கூடும். "

"இந்தக் குதிரையைப் பழக்கிவிட்டால் எனக்கு என்ன தருவீர்கள் தந்தையே.." சிரிப்புடன் கேட்டான் அபிமன்யூ.

"நீ நீண்ட நாட்களாய் கேட்டுக் கொண்டிருக்கும் சக்கர வியூகத்தின் அமைப்பு முறையையும் அதனை உடைத்துள் புகுவது மற்றும் மீள்வது பற்றியும் சொல்லித்தருவேன்"

"ஆகட்டும், தந்தையே"

"சரி, உச்சிப் பொழுதாகிவிட்டது, உணவருந்தப் போகலாம் வா"

"நீங்கள் சென்றுக் கொண்டிருங்கள். இன்னும் சற்று நேரத்தில் நான் வந்துவிடுகிறேன்"

அபிமன்யுவின் குதிரையின் கண்களை உற்று நோக்கியவாறே சொன்னான். குதிரை மெல்ல அவனிடம் நகர்ந்து வந்தது.

-2-

"நன்றாக கவனி அபிமன்யூ. எந்த ஒரு போரிலும் வெற்றி என்பது படைத்தளபதி வகுக்கும் வியூகத்தின்படிதான் அமையும். நம் முன்னோர்கள் பலவகையான போர் வியூகங்களை நமக்காக விட்டு சென்றுள்ளார்கள்."

"நான் சொல்கிறேன் தந்தையே.. மகரவியூகம், சர்ப்ப வியூகம், க்ரவுஞ்ச வியூகம், ஊசி வியூகம், சக்கர வியூகம் என பலவகைகள் இருக்கின்றன, சரியா" அபிமன்யூவை ஒட்டி நின்றது புரவி. கடந்த சில வாரங்களில் அந்த புரவியும் அபிமன்யூவும் மிகவும் ஒன்றி விட்டனர். எதையும் எளிதில் புரிந்துக் கொள்ளும் தன் மகனை கர்வத்துடன் நோக்கினான் அர்ஜுனன். பின்பு தொடர்ந்தான்.

"ஆம் அபிமன்யூ. அதில் மிக முக்கியமான வியூகம் சக்கரவியூகம். சுற்றிவைக்கப்பட்ட இரும்புச்சுருள் போல, சுருண்டு கிடக்கும் மரவட்டைப் போல அமைப்புக் கொண்டது சக்கரவியூகம். மொத்தம் ஐந்து வட்டங்கள் கொண்ட வியூகம் அது. பெரும் யானைப் படை முகப்பு வாயிலில் அரணாக முதல் வட்டத்திலும் அதைத் தொடர்ந்து உள் சுருளும் வட்டங்களில் எறிபொறிகள் கொண்ட படைகளும் மற்றும் வில்லாளிகள் கொண்ட படை நிறுத்தப்படும். மேலும் காலாட்படை தேர்ப்படை என யாவும் வட்டங்களின் ஆரத்தை நிரப்பும். இரண்டு வட்டத்துக்கும் நடுவில் எவ்வளவு பெரிய படை கொண்ட எதிராளியும் நுழைந்தால் மெல்ல மெல்ல நடுப்பாகம் தொடும் முன் முற்றிலும் அழிக்கப் படுவான். ஒவ்வொரு வட்டத்திற்கும் அதி சிறந்த வீரர்களாகிய மகாரதர்கள் பொறுப்பேற்பார்கள்."

"அதே நேரம் அந்த வியூகம் மற்ற வியூகங்களைப் போன்று நிலையாக ஒரிடத்தில் இருக்காது. நடுப்பாகத்தை அச்சாகக் கொண்டு அந்த வியூகம் நின்று நின்று சுற்றிக் கொண்டே இருக்கும். எதிராளி வியூகத்தில் அகப்பட்டால் அந்த சக்கரத்தில் உருட்டப்பட்டு, தான் இருக்கும் திசையும் அறியாது, வெளியேறும் வழியுமற்று, அங்கேயே அழிய வேண்டியதுதான். அப்படி வட்டம் சுற்றும் போது எதிராளி ஒவ்வொரு சுற்றுக்கும் புதுவகைப் படைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். உள் நுழைவதற்கு முன்பே கூட முழுப்படைகளும் அழிக்கப்படலாம்."

"அதன் உள் எப்படி நுழைவது தந்தையே "

"சக்கர வியூகத்தை உடைப்பது அத்தனை எளிதன்று மகனே. எதிரில் நின்று படைகளை அழித்து உள் நுழைய வாயில் ஏற்படுத்திய அடுத்த சில நிமிடங்களில் சக்கரம் சுழன்று உடைபட்ட அந்த வாயில் உடனடியாக அடைக்கப்பட்டுவிடும். மேலும் குதிரைப் படைக்கென்று ஆயத்தங்கள் செய்து போரிட்டுக் கொண்டிருக்கும் போது சுழலும் அந்த சக்கரத்தில் திடீரென்று யானைப்படையோ அல்லது காலட்படையோ வந்து திணறடிக்கும்"

"சுற்றிக் கொண்டிருக்கும் அந்த வியூகத்தை உடைப்பதற்கு அதிக வேகமும், அதே நேரம் சரியான நேரம் பார்த்தும் நுழைய வேண்டும். சக்கரம் சுழன்று நிற்கும் நேரத்தை கணித்து இடது, வலது புறங்களில் தாக்கி படைகள் அழிக்கப்பட வேண்டும். அப்போது இரண்டு புறமும் அழிக்கப் பட்ட இடத்தின் இடைவெளியில் நுழைய இயலாது. ஆகவே இரண்டு பக்கமும் அழிக்கப்பட்ட பின் நடுவில் நிற்கும் படை சுழலும் திசை நோக்கி நகரும் போது ஏற்படும் இடைவெளியில் உள் நுழைய வேண்டும். முக்கியமாக வியூகத்தின் பலமிழந்த பகுதி எது என்று கணிக்க வேண்டும். வேகமாய் நகரும் குதிரைப்படைகளை குறி வைக்கக் கூடாது. சக்கரம் சுற்றி காலாட்படை எதிர் வரும்போது மின்னலென தாக்கவேண்டும்."

"ஆஹா ஆஹா.. அற்புதம் தந்தையே. ஆனால் இது வரை சொன்னதெல்லாம் நீங்கள் எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவை போலவே எனக்கு நினைவில் அலைகிறது. ஆனால் வெளி வருவது எப்படி என்கிற சூட்சுமம் மட்டும்தான் புரியவில்லை"

அந்த நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சகாதேவன் அர்ஜுனனிடம் விரைந்து வந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். கண்ணன் தூதுக்கு துரியன் மறுப்பு தெரிவித்ததோடு இல்லாமல் கண்ணனைக் கொல்லவும் முயற்சித்தானாம். அர்ஜுனனுக்கு அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. மகனிடம் சொல்லவும் கூடத் தோன்றாமல் சட்டென்று எழுந்து தருமனின் குடிலுக்கு விரைந்தான்.

அபிமன்யூவின் எண்ணம் முழுக்க சக்கரவியூகம் வியாபித்தது. அர்ஜுனனுடன் அபிமன்யூ செல்ல, அவன் விதி அவனை முந்தி விரைந்தது.

-3-

குருஷேத்திரப் போர் துவங்கி பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன. பிதாமகர் பீஷ்மர் வீழ்ந்து, துரோணர் போர்த்தலைமைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். துரோணர் அனல் பறத்தி பாண்டவப் படைகளை துவம்சம் செய்தாலும், அதை விட தீவிரமாய் அர்ஜுனன் கௌரவப் படைகளை அழித்துக் கொண்டிருந்தான். இரு பக்கமும் அதிக சேதம் அடைந்திருந்தது. ஆனால் நாளுக்கு நாள் பாண்டவர்களின் பக்கம் வெற்றியின் சாயல் படர ஆரம்பித்திருந்தது. பன்னிரண்டாம் நாள் இரவு ஆலோசனை மண்டபத்தில் துரியோதனனின் குரல் வெறுப்பும், ஆத்திரமும் இயலாமையும் கலந்து வெளிப்பட்டது.

"ஆச்சாரியருக்கு பாண்டவர்கள் மேல் பாசம் போகவில்லை போலிருக்கிறது. வயிறு கவுரவர்களுக்கும் மனது பாண்டவர்களுக்கும் ஏன் வைக்கிறீர்கள் ஆச்சாரியரே"

"துரியோதனா... நாவடக்கம் தேவை. எதிரிகள் என்ன தெருவில் செல்லும் சாதாரண மானிடர்களா. அவர்களும் அஸ்திரங்கள் அறிந்த அதி வீரர்கள். முக்கியமாக அர்ஜுனனைப் பற்றி உனக்குத் தெரியாததல்லவே. அவனிருக்கும் வரை பாண்டவர்களின் படைகளை அழிப்பதென்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று."

அர்ஜுனன் பெயர் உச்சரிக்கப்பட்ட போதில் தானாக அவர் குரல் நெகிழ்ந்ததை துரியோதனன் கவனிக்க மறுக்கவில்லை.

"மன்னிக்க வேண்டும் ஆச்சாரியாரே. நீங்கள் நினைத்தால் இந்திரனே எதிர் வந்து போரிட்டாலும் அழிக்கும் வன்மை படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பிதாமகர் பீஷ்மர் தலைமையில் இருந்த போதும் சரி நீங்கள் பொறுப்பேற்ற பின்னும் சரி. நம் படைகளின் அழிவு அதிவேகமாக நடக்கிறதே தவிர்த்து பாண்டவர்களின் அழிவைக் கண்டிலேன் யான்."

"துரியோதனா, நீ அவசரத்தில் பேசுகிறாய். அர்ஜுனனை வெல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எனக்குத் தெரிந்த அத்தனை அஸ்த்திரப் பிரயோகங்கள் அஸ்வத்தாமனுக்கும் அவனுக்கும் தெரியும். நாங்கள் எதிர் நின்று போரிட்டால் வெற்றி தோல்வி யாருக்கென்பது முடிவு செய்வது முடியாத காரியம்."

"முடியாதென்றால் ஒதுங்கிவிடுங்கள் துரோணரே. என் நண்பன் கர்ணன் அனைவரையும் தவிடு பொடியென ஆக்கிக் காட்டுவான். சத்திரியர்கள் போரிட்டால் யுத்தம் வெல்லலாம். காட்டில் தவம் செய்யும் முனிவரைக் கொண்டு வந்து போரிடு என்று சொல்லிக் கொண்டிருப்பது என் தவறுதான்."

இப்படியான இழிச்சொல் துரோணருக்குப் புதிதல்ல என்றாலும் தன் வீரத்தை ஒருவன் பழிக்கிறான் என்ற போதில் அவருக்கு தாங்க முடியவில்லை. இயன்றவரையில் கோபத்தை அடக்கிக் கொண்டார்.

"துரியோதனா, உன்னிடம் இருப்பதற்கு காரணம் நீயல்ல, உன் தந்தை. என்னை இங்கே ஆச்சாரியனாக அங்கீகரித்து, என் குழந்தையைப் பசியிலிருந்து காத்தவர் அவர். அவர் குழந்தையை காப்பது என் கடன் என்று இங்கிருக்கிறேன். ஒன்று மட்டும் கேள். என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் காப்பேன். இது சத்தியம்"

"என் உயிர் பற்றி எனக்கு கவலை இல்லை, ஆச்சாரியரே. பாண்டவர்கள் தோற்றோடவேண்டும். அது மட்டுமே எனக்குத் தேவை"

"அப்படியானால் நாளை அர்ஜுனனை முடிந்தால் களத்தில் இருந்து அகற்று. அதுவும் உன் வீர தீரம் கொண்ட கர்ணனைக் கொண்டு செய், பார்ப்போம். மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்." கர்ணனைப் பற்றி சொல்லும் போது அவரின் குரலில் வெளிப்பட்ட எள்ளல் கர்ணனை காயப்படுத்தியது. அவன் அவமானத்துடன் அமைதியாக தலை குனிந்தான்.

"அப்படியே ஆகட்டும். ‘சம்ஸப்தகர்'களைக் கொண்டு அர்ஜுனனைக் களத்தை விட்டு வெகுதூரம் கொண்டு செல்கிறேன். ஆனால் பாண்டவப் படைகளை எப்படி அழிப்பீர்கள்?"

"இதுவரை யாரும் உபயோகிக்காத வியூகம் ஒன்றை நாளை அமைக்கப் போகிறேன். அதை உடைக்க எதிர் தரப்பில் இருவரால் மட்டுமே முடியும். ஒருவன் கண்ணன், மற்றொருவன் அர்ஜுனன். கண்ணன் போரிட மாட்டேன் என்ற சபதத்தை மீற மாட்டான். ஆனால் அர்ஜுனன் இதை தவிடு பொடியாக்கிவிடுவான். அவன் மட்டும் வியூகத்தை எதிர்க்க இல்லை என்றால் எளிதாக பாண்டவப் படை அழிக்கப்பட்டுவிடும்"

"அப்படி என்ன வியூகம் ஆச்சாரியரே.."

முதலாசான் கிருபாச்சாரியார் எழுந்து நின்று சொன்னார்.

"என் யூகம் சரியென்றால் அது சக்கரவியூகம்"

துரோணர் ஆமோதிப்பதைப் போல் தலையசைத்து விட்டு வியூகங்கள் பற்றியும் அதற்கு யாரார் எந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தத்துவங்கினார்.

"ஆச்சாரியரே, அர்ஜுனன் இல்லை என்றாலும் மற்ற நான்கு பேரும் ஒன்று சேர்ந்து முயற்சித்தால் வியூகத்தை உடைத்து உள்புக முடியாதா"

துரியோதனனின் குரலில் நம்பிக்கையையும் மீறி தொனித்தது சற்றே அவநம்பிக்கை.

"அவர்களை நான் தடுப்பேன். என்னை மீறி அவர்கள் உள் செல்ல முடியாது"

மண்டபத்தின் ஓரத்தில் இருந்து ஒருவன் எழுந்து சொன்னான். அவன் சிந்து தேசத்தின் அரசன், கௌரவர்களுடன் மருமகன் உறவு பூண்டவன். அவன் பெயர் ஜெயத்ரதன். பாண்டவ வனவாசத்தின் போது திரவுபதியைக் கடத்த முயன்று பின் பயத்தால் அவளைப் பாதிவழியில் விட்டு தப்பியோட முயற்சித்து அப்புறம் பீமனிடம் அகப்பட்டவன். அபயம் என்று கேட்டதால், தர்மன் இரக்கப்பட்டு உயிர் பிச்சையிட்டு அனுப்பப்பட்டவன். அப்படி அனுப்பப்படும் போது அவமானச்சின்னமாக ஐந்து குடுமிகளை தலையில் பீமனால் பிறையம்பு கொண்டு சிரைத்து அனுப்பப்பட்டவன்.

"இத்தனை மஹாரதர்கள் இருக்கும் போது அவர்களால் முடியாத ஒன்று உன்னால் முடியுமா?"

"முடியும். பாண்டவர்களின் வனவாசத்தின் போது அவர்களிடம் நான் பட்ட அவமானம் இன்னும் மறக்கவில்லை துரியோதனரே. எனக்கு ஐந்து குடுமி வைத்து அவமானப்படுத்தினார்களே அதை மறக்க முடியுமா? தங்களை வெல்ல யாருமில்லை என்ற அகங்காரத்தை அடக்க அன்றே சபதமிட்டேன். என் தவத்தால் அதன் விளைவான சிவனின் வரத்தால், அவர் தந்த செங்கொன்றை மலரைச் சூடி அர்ஜுனன் தவிர்த்த நால்வரையும் என்னால் ஒரு நாள் முழுக்க போரில் வெல்லமுடியும்"

"ஆஹா ஆஹா.. இது போதுமே.. ஆச்சாரியரே இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு?"

"அப்படியே ஆகட்டும். இவன் சக்கர வியூக வாயிலைக் காப்பான். ஒவ்வொரு ஆரத்திற்கும் ஒவ்வொரு மஹாரதர்கள் பொறுப்பேற்கட்டும். அச்சாணியில் துரியோதனன் இருக்கட்டும். தருமனை சிறைபிடித்ததும், அச்சாணிக்குள் கொண்டு வரப்படுவான். சக்கர வியூகத்தை மீறி வேறு யாரும் உள் நுழைய முடியாது. வெற்றி நிச்சயம் நமதே. தருமன் நிச்சயம் பிடிபடுவான்."

துரோணர் உரத்துக் கூறினார். அந்த வியூகத்திற்கு ஏற்படப்போகம் பங்கத்தை அவர் அறிந்திருக்கவில்லை. சட சடவென காற்றில் பறக்கப் போகும் போர் தர்மங்களைப் போல வெளியில் மரங்கள் காற்றில் சலசலத்துக் கொன்டிருந்தன.

(சற்றே பெரிய கதையான இதன் முடிவுப் பகுதி அடுத்த இதழில் வெளியாகும்).

நன்றி அதீதம் மின்னிதழ் : http://pazasu.atheetham.com/feb1/sirukathai2.html

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்