Friday, October 07, 2011

சரணாகதி - அதீதம் கடைசிப் பக்கம்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு  பல  ஆயிரம் மறுப்புகள் கூறிவிடலாம். ஆனால் கண்ணதாசன் சொன்னது போல் கடவுளின் நினைப்பு வராமல் யாரும் இருக்க முடியாது.  ஜனனத்தின் போதே உணர்ந்த ஞானக் குழந்தைகளும் உண்டு. பட்டுத் தெரிந்து இறக்கும் போது அல்லது இருக்கும்போதே  உணரத் துடிக்கும் மக்களும் உண்டு. அல்லது குறைந்த பட்சம் எதிர்க்கவாவது கடவுளை நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகத்தில் துயரங்களே இல்லாத மனிதன் என்பவன் இருக்க முடியாது.  எல்லா மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு துயரம் ஏதோ ஒருவகையில் ஜனித்து நிற்கிறது. அந்த துயரம் எல்லை கடந்து தாள இயலாமல் நிற்கும் போது அதை இறக்கி வைக்க கடவுள் நமக்குத் தேவைப் படுகிறார். ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? சரணாகதி தத்துவம் மிகவும் எளிமையானது.

பாரதத்தில் ஓரிடம். சூதாட்ட சருக்கம். பகடையில் தோற்றான் தருமன். தன்னை இழந்து, தன் தம்பிகளை இழந்து பின் மனைவியையும் வைத்திழந்த இழிநிலையில்  இருக்கிறான்.  வெற்றி பெற்ற ஆணவம் கொக்கரிக்கிறது. மேலும் மேலும் என்று ஆர்ப்பரிக்கிறது.  கொண்டுவா பாஞ்சாலியை, இந்த மன்றத்தில் அவள்  வந்து நிற்கட்டும். பார்த்திந்த பார் என்னைப் புகழட்டும் என்று பேயாட்டம் ஆடுகிறது.

பாஞ்சாலி இழுத்து வரப்பட்டு சபையில் நிற்கையில் ஆணவம் தன் குன்றின் மேலேறி இன்னும் ஆட்டம் போடுகிறது.  மார்பில் துணி மறைக்கும் பழக்கம் அடிமைகளுக்கு உறியதல்ல, அவள் ஆடைகளை உறித்தெரி என்று ஊளையிடும் ஓநாயாய் மாறுகிறது.

கையறு நிலையில் அழுகிறாள். பெரியோர்களை நோக்கி நீதி கேட்கிறாள். தன்னை மணந்த கணவர்களாவது இதை எதிர்த்துக் காப்பாற்றுவார் என்று தன் சேலையைக் கையால் பிடித்துக் கொண்டு அரற்றுகிறாள்.  அனைவரும் அமைதியாய் இருக்கிறார்கள். அதுவரை இல்லாத கடவுளின் நினைவு அவளுக்கு அப்போது வருகிறது. கேசவா மாதவா கோவிந்தா நீயே சரண் என்கிறாள்.  உறிய உறிய சேலையாய் தருகிறான் அந்த கோவிந்தன்.

சரணாகதி தத்துவத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக  பரவலாகச் சொல்லப் படும் கதை இது.  ஆதிமூலமே என்று அலறிய யானையின் கதையும் பரிபூர்ண சரணாகதியின் உதாரணம் அல்லவா.

ஆனால் பரிபூர்ண சரணாகதி யாரிடம் இருக்கிறது இப்போது ? பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர்   வேடிக்கையாகவும் ஒரு கதை சொல்வதுண்டு.

ஒரு சலவைத் தொழிலாளி துணியை ஆற்றங்கரையில் காயவைத்திருந்தார். அந்த பக்கம் ஒரு ரிஷி தெரியாமல் அந்த துணியை மிதித்த வாறு நடந்து சென்றுவிட்டார். சலவைத் தொழிளாளிக்கு வந்ததே கோபம்.  ஆத்திரத்தில் திட்டிக் கொண்டு கையில் கொம்பெடுத்துக் கொண்டு ஓடினார். அந்த ரிஷியோ அய்யோ கேசவா மாதவா நாராயாணா என்று அலறினார்.

மேலே இதெல்லாம் பார்த்த நாராயணன் அவசர அவசரமாக ஓடி வந்தவர் சற்று நேரத்தில் திரும்ப வைகுந்த்தம் சென்று விட்டாராம். அதை பார்த்த லட்சுமி கேட்டார். அவ்ளோ அவசரமா ஓடினீங்க. அதே வேகத்துல திரும்ப வந்துட்டீங்களேன்னு கேட்டாராம். அதுக்கு நாராயணன் சொன்னாராம்

" என்னை நம்பி ஒரு பக்தன்  காப்பாத்துன்னு கூப்டான். நானும் போனேன் "

" ஓ அவ்ளோ சீக்கிறம் காப்பாத்திட்டு வந்துட்டீங்களா...  யூ ஆர் தி க்ரேட் "

" அட நீ வேற... அவன் அதுக்குள்ள என்னை நம்பாம கல்லெடுத்து சண்டை போடப் போய்ட்டான். இனிமே நமக்கென்ன வேலைன்னு திரும்பி வந்துட்டேன்" அப்படின்னாராம்..


நன்றி அதீதம் : 

1 comment:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்