பொதுவாகவே வர்ணனைகளில் முன்னோரின் மரபு கடை பிடிக்க வேண்டும் தொல்காப்பியர் மரபியல் அதிகாரத்தில் சுட்டிக் காட்டுகிறார். கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பாடல்கள் ( பத்தாயிரம் + மிகைப்பாடல்கள் ?? ) எழுதிய கம்பர் அந்த மரபுக்குள்ளே மட்டும் கட்டுப்பட்டு இருக்க முடியுமா என்ன ? கட்டுக்குள் அடங்குமோ காட்டாற்று வெள்ளம் ? கம்பனின் கற்பனை யார் சொல்லி தடுத்து நிறுத்த முடியும் ? கோசல நாட்டின் தாய் நதி சரயு. பண்டை மரபை பல இடங்களில் அதை தாய்ப்பாலுக்கு இணையாக கம்பர் கூறி இருக்கிறார். சில இடத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையிலான வர்ணனைகளை எடுத்துப் போட்டு திக்கு முக்காடச் செய்வதில் வல்லவர் கம்பர்.
" இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் "

இரவி குலத்தின் எண்ணிலா பல வேந்தர் போற்றிப் புகழ்ந்த நல்லொழுக்கம் கொண்ட இந்த சரயு நதியானது தாயின் பால் போல ஓங்கு உயிர்க்கெல்லாம் தாயன்பை தரும் நல்லாறு என்று கூறுகிறார் கம்பர். இன்னுமொரு இடத்திலோ
கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
'எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது' என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.
மலையில் தோன்றி பின் அங்கிருந்து கடலில் கலந்த சரயுவின் வெள்ளம், அளவிட மறைகளாலும், சொல்லுதற்கு இயலாத பரம்பொருள் இவ்வெள்ளம் என்று கூறுதற்கு ஏற்ற வண்னமாய் ஆதிமுதலில் ஒன்றாகவே இருந்து பல்வேறு நீர் நிலைகளான ஏரி, குளம் முதலிய எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து பல்வேறு ஆராய்ச்சி உடைய சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போல பரவியது இந்த உலகில் என்கிறார். ஆக மொத்தத்தில் உலகத்துக்கான ஞானாசிரியன் என்று ஒப்புமை கூட்டுகிறார். ஆனால் இந்த பாடல்களுக்கு எல்லாம் முன்பாக
தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்
நிலை நிலாது இறை நின்றது போலவே
மலையில் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையில் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே!
தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் தழுவி மகிழ்ந்து ஆனால் சிறிது நேரமே தங்கியது போல மலையின் உச்சி முதற்கொண்டு அடிவரை எல்லா பகுதிகளில் உள்ள அனைத்தையும் வாரி எடுத்துக்கொண்டு விரையும் சரயுவில் பெருகும் வெள்ளம் விலைமகளிரை ஒத்தது என்றும் கூறி இருக்கிறார்.
அப்படியானால் நதியை இழிவு செய்கிறாரா ? அப்படி ஏதும் இல்லை. அந்த காலத்தில் இவர்கள் சமூகத்தின் அங்கம் அவ்வளவே. அதே நேரத்தில் ஒப்புமை என்பது உயர்ந்தவைக் காணல் என்று மட்டும் இல்லாமல் எல்லா வகையிலும் ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் போரையும், சில இடங்களில் குடிகாரன், சில இடங்களில் செழுமை என அச்சமூக அங்கத்தினரை ஒப்பிட்டிருக்கிறார். அவ்வகையில் இது போன்ற ஒப்புமை அப்போதைய சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என்றும் கொள்ளலாம் அல்லவா ?
அப்படியானால் நதியை இழிவு செய்கிறாரா ? அப்படி ஏதும் இல்லை. அந்த காலத்தில் இவர்கள் சமூகத்தின் அங்கம் அவ்வளவே. அதே நேரத்தில் ஒப்புமை என்பது உயர்ந்தவைக் காணல் என்று மட்டும் இல்லாமல் எல்லா வகையிலும் ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் போரையும், சில இடங்களில் குடிகாரன், சில இடங்களில் செழுமை என அச்சமூக அங்கத்தினரை ஒப்பிட்டிருக்கிறார். அவ்வகையில் இது போன்ற ஒப்புமை அப்போதைய சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என்றும் கொள்ளலாம் அல்லவா ?
செழுமைன்ன உடனே இன்னொரு பாடல் குறிப்பிடத் தோணுது.
பருவ மங்கையர் பங்கய வாள்முகத்து
உருவ உண் கணை, ‘ஒண் பெடை ஆம்’ எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ. 23
இளமங்கையரின் ஒளி நிறை முகம் பார்த்து அதில் இருக்கும் மையிட்ட அழகிய கண்ணை பார்த்த வண்டுகள், ஆஹா இது ஒளி பொருந்திய பெண் வண்டுகள்னு அதன் மேல மையலோட அன்பு பெருக அந்த மருத நிலத்திலேயே தங்கிட்டனவாம் கருவண்டுகள்.
இது மாதிரியான பாட்டெலாம் படிச்சுட்டுத்தான் கண்ண தாசன் எழுதினார் போல.
"" பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட,
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!! ""
என்ன ஒரு ஆழ்ந்த உவமை ? எளிமையான ஒன்று ? உங்களுக்கும் அவ்வாறு உவமைகளும் கற்பனைகளும் ஊற்றெடுக்க வேண்டுமா.... கம்பனை கற்போம் வாருங்கள் !
3 comments:
Post a Comment