இந்திய பிராமணனைக் காதலித்து அவளது கத்தோலிக்க அப்பனால் மறுக்கப்பட்டதால், காதல் தோல்வியில் இதே உத்தரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு அவள் இறக்கும் போது 25 வயது தான். இறக்கும் போது என்ன? இப்பவும் கூட அதே வயசு தான்.
" செல்வி, எத்தனை தடவை சொல்றேன். மாடில காய வச்ச துணிய கொண்டு வந்து வைக்கறதா இருந்தா நைட்ல மட்டும் கொண்டுவான்னு. யாராவது பாத்துட்டா பேயோடு குடும்பம் நடத்துறான்னு என் பேருல்ல கெட்டுப் போகும். அப்புறம் யாரு எனக்கு பொண்ணு குடுப்பாங்க "
ராஜன் உத்தரத்தைப் பார்த்து கத்தினான். முப்பது வயது கடந்த முதிர் இளைஞன். இன்னும் ஒருமுறை கூட கல்யாணம் ஆகவில்லை என்று பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் புலம்பிக் கொண்டிருப்பவன்.
" ஸில்வியான்ற பேரைக் கடிச்சுக் குதறி செல்வின்னு கூப்டாதேன்னு எத்தனை முறை சொல்லிருக்கேன் " முனுமுனுத்தாள் ஸில்வியா.
" நேத்து நைட்டு துணி எடுக்கப் போனேன். பேய்க்காத்து அடிச்சது தெரியுமா. என்னோட பாதி உடம்பு பிஞ்சு போயி வேப்ப மரத்துல மாட்டிக்கிடுச்சு. கஸ்டப்பட்டு எடுத்து சரி பண்ணேன். அதான் விடியக்காலைல போய் எடுத்துட்டு வந்துட்டேன். "
" யாரும் பாக்கலல்ல "
" பக்கத்து வீட்டு பையன் மட்டும் எக்சர்சைஸ் செய்யும் போது காத்தே இல்லாம துணி பறக்குதேன்னு ஆச்சரியப்பட்டான்"
" நீ துணி எடுக்க போயிருக்க மாட்ட. அவன் சின்னப் பையன் அவனை சைட்டடிக்கலாம்னு போயிருப்ப "
ஸில்வியா அமைதியானாள். சற்று நேரத்தில் விசும்பல் சத்தம் வந்தது.
" நான் இருந்து செத்து போன வீடாச்சேன்னு சென்ட்டி மெண்டா இங்கே இருக்கறதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் "
" அட இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி மூசு மூசுங்கற"
" யாருக்கும் தெரியாம இந்த வீட்ல இருந்தேன். உங்கண்ணுல எப்படியோ மாட்டிட்டேன். அதுல இருந்து உன்னைத் தவிர வேற யாரையும் பாத்திருக்கேனா ? உனக்காக எவ்வளவு வேலை செய்யறேன். என்னைப் போயி இப்படி சொல்லிட்டியே " விசும்பிக்கொண்டே உத்திரத்தை விட்டு கீழிறங்கினாள் ஸில்வியா.
" சரி சரி. அழ ஆரம்பிக்காத. எனக்கு தூக்கம் வருது "
ஸில்வியா டாம் அண்ட் ஜெர்ரி பார்க்க, ராஜன் தூங்க ஆரம்பித்தான்.
**
" அன்னிக்கு சைட்டடிக்கிறியான்னு சொன்னதுக்கு என்னமோ கோச்சுக்கிட்டியே. இப்ப நானில்லாதப்ப ரெண்டு மாசமா யாரோ ஒருத்தன் அடிக்கடி வந்துட்டு போறானாமே. "
" உனக்குத் தெரிஞ்சு போச்சா ? அவன் ரொம்ப நல்லவன். சின்ன வயசுல அவனும் நானும் க்ளாஸ் மேட் தெரியுமா. நான் சாகறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடி, சண்டைல அவன் குண்டு பட்டு செத்துட்டான். ரொம்ப நாளைக்கப்புறம் இப்ப கோஸ்ட்மேட் ஆகிட்டோம். பீட்டர் இங்க வா. ராஜனுக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சு "
" நான் இங்க தான் இருக்கேன். ரொம்ப கஸ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சேன் இவளை. எங்களோட கோஸ்ட் அக்கவுண்ட்ல இவ பேரே இல்லை. எடுத்துட்டாங்க"
உத்தரத்தின் பக்கத்தில் இருந்த அட்டத்தில் இருந்து வெளி வந்தான் பீட்டர்.
"என்ன ஒரே சைவ வீடா இருக்கு ஸில்வியா. ஒரு எலி கூட கிடைக்கல. எனக்கு ரொம்ப பசிக்குது. "
வாயில் கதவு தட்டப்பட்டது. இருவரும் உத்தரத்தில் ஒளிந்து கொண்டார்கள்.
" அங்கிள் என்னோட பூனையக் காணோம். இங்க வந்துச்சா? நீங்க பாத்தீங்களா"
" இல்லையேப்பா "
" சரிங்க அங்கிள். ரொம்ப சாது பூனை எங்க போச்சோ " என்று ஆரம்பித்து ஒரு மைல் நீளத்துக்கான அந்தப் பூனையின் பெருமைகளை சொல்லி புலம்பிக்கொண்டே போனான் அவன்.
சில்வியா சைவப் பேய். அவள் மிஞ்சிப் போனால் எங்காவது கடையில் பூசணிக்காயோ அவரைக்காயோ பச்சையாக தின்றுவிட்டு வந்துவிடுவாள். எல்லாம் அவளின் இறக்கும் முன் காதலனின் பழக்கத்தால் வந்தது. ராஜன் வீட்டில் அசைவம் சமைக்கும் போதெல்லாம் அவள் வெளியில் எங்காவது தங்கிவிடுவாள்.
ராஜன் உத்தரத்தைப் பார்த்தான்.
" என்னை சந்தேகப் படறியா ராஜன் ? நான் சைவம்னு உனக்குத் தெரியாதா ? " ஸில்வியா கேட்டுக் கொண்டிருக்க, இராஜனின் பார்வை பீட்டரின் மேல் பதிந்தது.
" கோஸ்ட் காட் பிராமிஸ். நானில்லை ராஜன். நான் போன வாரம் காட்டுல அடிச்ச மானே இன்னும் காலியாகல. அதை மரத்து மேல வச்சுட்டு இங்க வந்திருக்கேன்." பீட்டர் உத்தரத்தின் மேல் அடித்து சத்தியம் செய்தான்.
வேகமாக அடித்ததில் மணிக்கட்டோடு கை கழண்டு எதிரே இருந்த கேலண்டரில் போய் ஒட்டிக் கொண்டது.
" ரெண்டு மூனு வாரமாவே இங்க கோழி, ஆடு, பூனைன்னு காணாம போகுது. எனக்கு உங்க மேல தான் சந்தேகமா இருக்கு. சில்வியா நீ கூட இப்ப எல்லாம் நான்வெஜ் சாப்டறது தெரியும் எனக்கு "
" அது வந்து அது வந்து...." மென்று முழுங்கினாள் ஸில்வியா.
"சாரி ராஜன். எல்லாம் பீட்டர் பழக்கம் பண்ணி விட்டுட்டான். ஆன நான் வெறும் மான் கறி மட்டும் தான் சாப்டறேன். வேற எதுவும் இல்லை. என்னை நம்பு "
" எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். ரெண்டு பேரும் இன்னைக்கே இந்த இடத்தை விட்டு காலி பண்ணுங்க. இல்லாட்டா கோடங்கிய கூட்டி வந்து தொரத்திடுவேன் உங்க ரெண்டு பேரையும்"
கொஞ்ச நேரம் மூன்று பேரும் சண்டை போட்டார்கள். எல்லாம் பீட்டரால் தான் என்றாள் ஸில்வியா. பீட்டர் மறுபடி மறுபடி அது தான் இல்லை என்று சொல்லி களைத்துப் போனான்.
" நாங்க போறோம் ராஜன். ஆனா சத்தியமா அக்கம் பக்கத்துல காணாம போற ஆடு மாடு கோழிகளுக்கு நாங்க காரணமில்லை. " சொல்லி விட்டு பீட்டரும் ஸில்வியாவும் ஜன்னல் வழியாக வெளியே சென்றனர்.
"பீட்டர், ராஜனுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அவனோட பெட் இருக்கிற இடத்துக்கு கீழ நாலு தங்க காசு பதுக்கி வச்சிருந்தேன். இத்தனை நாள் இங்க இருந்ததுக்கு வாடகையா அத அவனுக்கு குடுத்துட்டு வந்துடறேன்"
கொஞ்ச தூரம் போனதும் ஸில்வியா சொல்லிவிட்டு திரும்பி வந்தாள்.
வெளியில் சென்ற அதே சன்னல் வழியாக ஸில்வியா உள்ளே நுழைந்த போது அங்கே இராஜன் சம்மனமிட்டு அமர்ந்திருந்தான். பக்கத்து வீட்டுப் பூனை கழுத்து இறுக்கப் பட்டு இறந்திருந்தது. ஒரு வெறியுடன் ராஜன் அந்த பூனையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வாயில் கடைவாய் பக்கத்தில் இருந்து கோரைப்பற்கள் இரண்டு மெதுவாய் நீண்டுக் கொண்டிருந்தன.
(பட உதவி : currenttamilnews.blogspot.com)
அதீதம் மின்னிதழில் வெளி வந்தது.
நன்றி அதீதம்:

2 comments:
Post a Comment