" ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்பு
ஒன்றா இரண்டா உடன் சொல்லும் என்பார்
நாம்
குதிரைக்கு ஏது கொம்புகள் என்றால் அது
கோர்ட் அலட்சியக் குற்றம் என்பார்
கேள்வியை நன்றாய் கேட்டுச் சொல்லும்
இரண்டா ஒன்றா என்பது என் கேள்வி
உண்டா இல்லையா என்று நான் உம்மிடம் கேட்டேனா
ஓய் காது கேட்காதா
என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி விடுவர் "

ஸ்டேடஸ் மெஸேஜில் போட்டு பலரிடம் இதைப் பலரிடமும் கேட்டுக் கொண்டிருந்தேன். இணையத் தேடலில் கிடைக்காத போது நண்பர் கபீஷ்-தீபா அவர்கள் ஆஹா இது எங்களூர் பற்றியது அப்படின்னு சொல்லி இது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதியது. நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்று சொன்னார். இணையத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை.
கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடியதில் காலச்சுவடு பதிப்பகம் ஒரு ஆய்வு நூலாக இதை வெளியிட்டிருக்கிறது. உடுமலை.காம் மூலமாக வாங்கினேன்.
நல்ல நகைச்சுவையுடன் கூடிய வரலாறு படிக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு கட்டாயம் ஏற்படும்.
வக்கீல்கள் பீஸு பற்றியும் வக்கீல்களின் வாதப்புரட்டுகளைச் சொல்லும் போது நமக்கு கண்டிப்பாக சிரிப்பில் பஞ்சம் ஏற்படவே ஏற்படாது
" கோட்டுப் பீஸு குமாஸ்தாப் பீஸு
கூடிக் காப்பி குடிக்கப் பீஸு
வெற்றிலை வாங்கிட வேறொரு பீஸு
வக்கீல் பீஸு மகமைப் பீஸு
வக்காலத்து வாங்க வகைக்கொரு பீஸு
எழுதப் பீஸு சொல்லப் பீஸு
எழுதிய தாளை எடுக்கப் பீஸு
நிற்கப் பீஸு இருக்கப் பீஸு
நீட்டினக் கையை மடக்கப் பீஸு "
அம்மாடி இத்தோடு நிற்கவில்லை வக்கீல்கள் பீஸு வாங்கும் விவகாராம் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கூட பீஸு வாங்குவார்களாம்.
வக்கீல்களின் குணாதிசயம் எப்படி என்றால்
" கூட்டில் ஏற்றி குறுக்கு மறுக்காய்
கிராஸு கேட்டுக் கிடுக்கி விடுவான்
சந்தேகமில்லை சந்தேகமில்லை
நீர்
அண்டப் புரட்டனை அறிய மாட்டார் "
இப்படியான வக்கீலை யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்..
.....
ஈரங் கிகளை எடுத்துச் சொன்னால்
பீரங் கிகளும் பின்னிட்டோடும்
பொல்லாதவர் அவர் பொல்லாதவர் அவர்
இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும்
இணையாவாரோ இணையாவாரோ
.....
இவர் சொல்லும் ஏழரை நாட்டான் சனி பகவான் இல்லை :) அந்தக் காலத்தில் Earderly Norton என்பவர் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆங்கிலேய வழக்குறைஞர். அவரின் பெயர் நாட்டார் வழக்கில் ஏழரை நாட்டான் என்றே வழங்கப் பட்டதாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இன்னும் பல நாஞ்சில் நாட்டு வழக்கு வார்த்தைகளும் மருமக்கள் வழி மான்மியம் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் அந்த காலத்தில் நிலவிய பல அவலங்களை எடுத்துச் சொல்லும் அருமையான ஒரு நூல். இந்த நூல் பற்றி இன்னும் எழுதலாம். உங்கள் நூலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு புத்தகம் என்று சொல்வேன்.
சேர்க்க மறந்தக் குறிப்பு : ஜெயமோஹன் இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவான விமர்சனம் வைத்திருப்பார். மருமக்கள் வழி சொத்து முறைப் பற்றிய அவலத்தை விரிவாக எடுத்துரைக்கும் அவருடைய கட்டுரை - இங்கே
மேலும் படிக்க
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 180 ரூபாய்.
பதிப்பாசிரியர் : அ.கா.பெருமாள்.
33 comments:
Post a Comment