Monday, March 22, 2010

கல்லுக்குள்ளே உயிரை...

" அது அவனே தான் ... " அவள் உள்ளம் குதூகலத்தில் துள்ளியது.

அன்னமில்லாமலும் வெறும் காற்றையும், காற்றில் உள்ள ஈரத்தையும் உட்கிரகித்துக் கொண்டு இது நாள் வரை எந்த உணர்ச்சியும் அற்று கல் போல தவமிருந்திருந்தவளின் உள்ளத்தில் பல ஆண்டு கழித்து ஏதோ குதூகல உணர்ச்சி மேலோங்கியது. அவளுக்கு தெரிந்து விட்டது. இதுநாள் வரை செய்த தவத்தின் பலன் அதோ வந்துக் கொண்டே இருக்கிறது.
"இராம இராம இராம இராம "

உள்ளத்தில் பல உணர்ச்சிகள் ஓட பழைய மனதின் ஒரு பகுதி இராம இராம என்று துதித்துக் கொண்டிருந்தாலும், மறுபகுதி நினைவுகளைக் கிளறி விட்டது.

*******
" தவறு செய்துவிட்டாய் அகல்யா "

" மன்னியுங்கள் சுவாமி, ஆனால் அது அவ்வளவு பெரிய தவறா "

" ஆம் அகல்யா.. நாம் பூண்டிருப்பது தவக் கோலம். இதற்கு சற்றேனும் களங்கம் வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் "

எதிரே இந்திரன் பூனையாய் வெளியே போக முயன்று கொண்டிருந்தான்

" பாதகா !! நில்.. எதன் மீது இத்தனை ஆசைக் கொண்டு வந்தாயோ அது உன் உடல் முழுதும் நிறைந்து தினமும் அதையே நீ பார்க்க கடவாய் "

கோபம் என்பதறியா கௌதமரின் வாயில் இருந்து சீற்றத்துடன் சாபமாய் வார்த்தைகள் வெளிவந்தது. இந்திரன் அங்கு நிற்கவும் இயலாமல் முனிவரை காணவும் இயலாமல் தலை குனிந்த படியே வெகு வேகமாக வெளியேறினான்.

கௌதமரிடம் கோபம் சற்றே குறைந்தாலும் வருத்தம் நிறைந்திருந்தது

" நீ தெரியாமலோ அல்லது தெரிந்தோ உடலளவில் குற்றமடைந்திருந்தால் அது பாதகமில்லை அகல்யா ஆனால்.. "

" சுவாமி, நடக்கும் ஓசையைக் கொண்டே வந்தது தாங்களல்ல என்ற உண்மையை அறிந்தேன்.. அவன் உள்ளே நுழைந்தாலும் என்னைத் தொடவும் அனுமதிக்கவில்லையே.. பின் ஏன் என்மீது இத்தனை வருத்தம்"

" அகல்யா! வந்திருப்பது இந்திரன் என்று தெரிந்ததும், இந்திரனே என்னை தேடிவந்தான் என்றால் நான் இந்த உலகத்திலேயே எவ்வளவு பேரழகி என்ற கர்வம் உன்னுள் எழுந்தது தவறு."

அகலிகை திகைத்தாள்.

" தவறு தான் மன்னியுங்கள் சுவாமி "

" இல்லை அகல்யா இது மன்னிக்க இயலாத தவறு. அதுவுமில்லாமல் மன்னிக்க நான் யார் ? கண நேரத்தில் எழுந்ததாயினும் அது போன்ற உணர்ச்சிகள் அழிவுக்கு வித்திடும். உணர்ச்சிகள் மரத்து இறைவன் ஒருவனே எண்ணத்தில் நிறுத்தி தவம் செய்யவேண்டும். எப்போது மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைக்க ஆரம்பிக்கிறோமோ, எப்போது பிற உணர்ச்சிகள் எழுந்து இறைவனை பின்னுக்கு தள்ள முற்படுகிறதோ அப்போதே கடவுளிடம் இருந்து நாம் தூர விலகிப் போகிறோம். ஆணவமும் கர்வமும் மனிதனை கீழான பள்ளத்தில் தள்ளிவிடும் இறைவனை அடையும் பக்குவத்தை தற்சமயம் நீ இழந்து விட்டாய் அகல்யா"

" மீண்டும் அந்த நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் "

"கடுந்தவம் செய்ய வேண்டும் அகல்யா.. ஊண், உறக்கம் அற்று வேறு நினைவற்று இறை ஒன்றையே போற்றுதல் வேண்டும். ஐம்புலன்களில் எந்த புலனின் உணர்ச்சிக்கும் இடம் தரக் கூடாது.. வெறும் கல் போல இருக்க முடியுமா உன்னால் "

"கட்டளை சுவாமி .. முடியுமா என்று கேட்கும் போதே இது செய் என்று சொன்னதாக எடுத்துக் கொள்கிறேன். இதோ இந்த நிமிடத்தில் இருந்து கல்லினைப் போல ஆசிரமத்து அருகில் அமரப் போகிறேன். தங்களின் ஆசியும் கடவுளின் கிருபையும் கண்டிப்பாக இருக்கும். கால வரையற்று தவத்தில் இருப்பேன் சுவாமி"

எனக் கூறிக்கொண்டே அருகில் இருந்த கற்பாறை மீதமர்ந்தாள்.

கௌதமர் வியந்து போனார். எத்தனை உறுதி. மகிழ்ச்சியாக இருந்தது. இறைத்தேடலின் முதல் கட்டத்தை அவள் துவக்கி விட்டாள். கூடவே சொன்னார்.

" உலகத்தின் மிக உத்தமன் ஒருவன் இந்த ஆசிரமம் வரும் நேரம் வரை உன் தவத்தை தொடர்ந்து செய்து வா அகல்யா. அவன் கால் துகள்கள் தருமே கோடி புண்ணியம். அது இந்த மண்ணில் படும் போது அனைவருமே உய்விக்கப் படுவோம்"

அகல்யாவிற்கு அந்த வார்த்தைகள் காதில் விழவில்லை.
********

அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. வெகு அருகில் வந்துவிட்டான்
"ஓரம்பெடுத்து எம்மீது எய்தெம்மை உய்விப்பாயா இராமா...
உள்ளம் மகிழ என்னை மாயவுலகினின்று எம்மை விடுவிப்பாயா இராமா..."

" இதோ அருகே வந்து விட்டான் இராகவன்.. " உள்ளுணர்வு கூறியது மெல்லக் கண் திறந்தாள்.


"அட இதென்ன இத்தனை வெளிச்சம் ... இராமனாலா அல்லது கண்திறவாமல் இத்தனை நாள் கிடந்ததால் கண் கூசுகிறதா" யோசித்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ துகள் ஒன்று கண்ணை நோக்கி வருவது போலிருக்க. சட்டென்று ஒதுங்கினாள்.

"அது இராமனின் கால் பட்ட துகள் அல்லவா இதைப் பெறத்தானே இத்தனை காலம் தவமிருந்தோம்.. தவறவிட்டு விட்டேனே" என நினைத்தவாறே அவர்களை வணங்கி எழுந்து நின்றாள்

இந்நிகழ்ச்சியை பிற்காலத்தில்

கண்ட கல்மிசைக் காகுத்தன் கால்துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கற வேறுபட் டுருவம்
கொண்டு மெய்யுணர்பவன் கழல்கூடி யதொப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனிப் பணிப்பெண்
என்கிறார் கம்பர்

தான் கற்சிற்பம் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் எழுந்ததும் இராமனுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. குருதேவர் விசுவாமித்திரர் இந்த வனத்தை அடைகையிலே அகலிகையைப் பற்றிக் கூறியிருந்தார். அவள் இடையறாது ஒரு உத்தமனின் வருகையில் அவள் சுயம் அறிவாள். என்று.

ஒருவேளை குருதேவர் சொன்னது என்னைப் பற்றி தானா ? அப்படி என்றால் எத்தனை புண்ணியம் என் மூதாதையர்கள் செய்திருந்தால் இத்தகு பாக்கியம் கிட்டும்.

" ஆசீர்வதியுங்கள் அம்மா " சட்டென அகல்யாவின் காலில் இராகவன் விழுந்தான். அகல்யாவிற்கு கண் கலங்க துவங்கியது

" என்னை அம்மா என்றாயே... மகனே .. நீடூழி வாழ்க "

" தாயே எனைப் பெற்ற தாயோ பத்து மாதம் தன்னுள் சுமந்தாள்.. ஆனால் நீங்கள் அன்றோ இது நாள் வரை என்னை மனதில் சுமந்தீர்கள். என்னைப் பெற்ற தாயை விட உயர்ந்தவர் அல்லவா தாங்கள் "

இராகவன் உணர்ச்சி பூர்வமாய் நின்றிருந்தான்

" அகல்யா உன் தவம் பயனடைந்து விட்டது ... நீ உய்வு பெற்றாய் " கௌதமர் கூறினார்

எதையும் அவள் மனம் கேட்கவில்லை.

" இராமா.. நான் உன் தாயா அத்தனை பேறு வாய்ந்தவளா நான் "

" கௌதமரே.. தான் செய்த தவறுக்காக இதுகாறும் தவத்தில் இருந்து இப்போது தூய்மை நிலை அடைந்திருக்கிறாள் அகல்யா. நம்மையும் விட இறையினைக் காணும் முழுத்தகுதி இவள் பெற்றிருக்கிறா"

விஸ்வாமித்திரர் சொன்னார்.

அதுவும் அகலிகை காதில் ஏறவில்லை. அவளுக்கு கேட்டதெல்லாம் "என் தாயே" என்ற இராமனின் குரல்.

இது இறையல்லவா.. இந்த இறையே என்னை தன் தாய் என்று ஏற்றுக் கொண்டதா... அதே நினைவு மேலோங்கியது.

"நன்றி இராமா"

மனது உள்ளுக்குள்ளேயே நன்றி கூறியது.

இராம இராம என்னும் ஓசை காதில் பலத்தெழுந்தது. எதிர் நிற்பது யாரென்ற கவலை இல்லாமல் போனது.

உலகம் மறந்து போனது. இராம இராம... கண்களை மூடி மறுபடி அந்தப் பாறையின் மீதமர்ந்தாள்.

" அகல்யா எழுந்திரு என்னாயிற்று அகல்யா , எழுந்திரு" கௌதமர் தொட்டு எழுப்ப போனார்.

எத்தனை வருடம் உணர்ச்சிகளை மறுத்த தேகம் இது. கௌதமரின் ஸ்பரிசம் எதுவும் செய்யவில்லை.
அவள் மனமெங்கும் இராமனின் உருவமே வியாபித்தது. மெல்ல மெல்ல அது பெரிதாகிக் கொண்டே போனது. விஷ்வாமித்திரர் கௌதமரை தடுத்தார். அகல்யாவின் முகத்தில் பேரொளி தெரிந்தது.

கௌதமர், விஷ்வாமித்திரர் முதற்கொண்டு அனைவரும் கை கூப்பி வணங்கி நின்றனர். முகத்தில் தெரிந்த பேரொளி அனைத்து நட்சத்திரத்திலும் ஒளிதரும் நட்சத்திரமாய் மேலே மேலே உயர்ந்து வானத்தை நோக்கி கிளம்பியது!

44 comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்