உள்ளமும் கண்களும் ஸ்ரீராமைத் தேடிக்கொண்டிருக்க மாலதி
"உஷா நர்ஸ், கொஞ்சம் வாங்களேன். ப்ளீஸ் " என்று மருத்துவமனையில் பொது வார்டில் இருந்து நர்ஸை அழைத்தாள் மாலதி. அவள் குரலில் வலி அப்பட்டமாய் தெரிந்தது.
ஸ்ரீராம் வந்தானா? படுக்கையில் இருந்து மறுபடி எழுந்து உட்கார முயற்சித்ததால் அடிவயிற்றுக்கு கீழே சுரீர் என்று வலி எழுந்தது.
" ஏம்மா உனக்கு ஒரு முறை சொன்னாப் புரியாது ? ஆறு தையல் போட்டிருக்கும்மா. ப்ளட் ரொம்ப போயிருக்கு. படுத்திருக்கனும் நாங்க சொல்ற வரைக்கும். இல்லாட்டா நின்னு போன இரத்தம் மறுபடி போக ஆரம்பிக்கும் ரொம்ப க்ரிடிகல் ஆகிடும்."
நர்ஸ் ஓடி வந்து கத்தினாள் மறுபடி மெதுவாய் படுக்க வைத்தாள்.
" சாரி நர்ஸம்மா, நான் குடுத்த நம்பருக்கு போன் பண்ணிச் சொன்னீங்களா "
" பண்ணேன்மா. செக்யூரிட்டி எடுத்தாங்க. உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிடறதா சொன்னாங்க. மைனர் ஆக்ஸிடன்ட் ஆனதா தான் சொல்லிருக்கேன்"
" மொபைல்ல ட்ரை பண்ணுங்களேன். ப்ளீஸ்"
" மொபைல் ரிங்க் ஆகுது யாரும் எடுக்கலைம்மா "
வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்து வீடுதிரும்புபவள் தோழியின் வற்புறுத்தலால் அவளுடன் ஷாப்பிங் போய்விட்டு திரும்பிய போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்து போனது. ஒன்பது மணி அளவில் அந்த சந்தில் திரும்பும்போது சட்டென்று தெருவிளக்கு படார் என்று வெடிச் சத்தத்துடம் அணைந்து போனது. யாரோ கல்லெறிந்து உடைத்திருக்கிறார்கள். சாராயவாடை ரொம்ப நெருக்கமாய் தெரிந்தது. மூன்று அல்லது நான்கு பேர் தன்னை சுற்றி இருப்பதை உணர்ந்தாள். விதி, கழுத்தில் கத்தியை வைத்து நகையைக் கேட்டவர்கள் நகையோடும் வண்டியோடும் மட்டும் போயிருந்தால் பரவாயில்லை.
மயக்கம் தெளிந்த போது ஆஸ்பத்திரியில் இருந்தாள்.
" சரிங்க நர்ஸம்மா.. எதுக்கும் இன்னோரு முறை ட்ரை செய்யுங்களேன் ப்ளீஸ் "
இன்னும் ஏன் ஸ்ரீராம் வரவில்லை. ஒருவேளை விஷயம் தெரிந்து வெறுத்து விட்டானா ? செத்துப் போகட்டும் என்று விட்டு விட்டானா? அவ்வளவு தான் எங்களின் காதலின் வலிமையா ? உறவுகளெல்லாம் மறுத்து வந்து இவனையே நம்பி வந்தேனே அதற்கு இது தான் பரிசா ?
யோசித்தலின் நினைவுகளின் வலியும் உடல்வலியும் மனவலியும் சேர்ந்து அவளை உறக்கம் கலந்த மயக்க நிலைக்கு மறுபடி தள்ளியது.
**
இளஞ்சூடான நீர்த்துளிகள் மேல் பட கண் விழித்தாள் மாலதி. ஸ்ரீராம் அருகில் அமர்ந்திருந்தான். பொது வார்டில் இருந்து தனி வார்டுக்கு ஸ்ரீராம் அவளை மாற்றி இருந்தான்.
" ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்ம்ம்... " அழுகையாய் வெடித்தாள் மாலதி.
" சாரிடா, நேத்து பன்னென்டு மணியாகியும் நீ வீட்டுக்கு வரலைன்னதும் எங்கல்லாம் தேடினேன். உன் ஃப்ரண்டு அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்க. இந்த பதட்டத்துல மொபைல் கூட கைல எடுத்துட்டு போகலை. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் குடுத்துட்டு வீட்டுக்கு வந்தா ஆஃபீஸ் ல இருந்து நிறைய மிஸ்டு கால். போன் பண்ணிக் கேட்டதுல நீ இங்க அட்மிட் பண்ணிருக்கறதா சொன்னாங்க " விம்மினான்.
" எல்லாம் போச்சு ஸ்ரீராம். இனிமே உன் மூஞ்சில எப்படி முழிப்பேன்" கதறினாள்.
" சரி சும்மா அழுது உடம்பைக் கெடுத்துக்காதே. எல்லாம் சரியாய்டும். உடம்புல வேற எங்கயாச்சும் அடிபட்டா ஆபரேஷன் பண்ற மாதிரின்னு நினைச்சுக்கோ"
ஆதுரமாய் அவளை தாங்கினான்.
" சார் அவங்க உடம்பால மனசால ரொம்ப வேதனைப் பட்டிருக்காங்க. படுபாவிங்க எப்படி சிதைச்சிருக்கானுங்க. ஆறு தையல் சார். தெய்வமே, அவனுங்க நாசமா போக" நர்ஸ் சாபமிட்டாள்.
"அவங்களுக்கு முழு ரெஸ்ட் தேவை சார் அதிகம் பேசி அவங்களை தொந்தரவு செய்யாதீங்க " தூங்க மருந்து கொடுத்துவிட்டு ஸ்ரீராமிடம் சொல்லி விட்டு நர்ஸ் சென்றுவிட்டாள்.
இரவில் விழிப்பு தட்டியது மாலதிக்கு. எழ முயற்சித்தாள். ஸ்ரீராம் உட்கார்ந்த படியே தூங்கிக் கொண்டிருந்தான். இவள் அசைவை உணர்ந்ததும் ஸ்ரீராம் விழித்துக் கொண்டான்.
" எதாச்சும் வேணுமா மாலதி "
" இல்லை வேண்டாம் ஸ்ரீராம் நீ தூங்கு. நான் படுத்துக்கறேன்" மறுபடி கண்மூடி படுத்துக் கொண்டாள்.
கண்ணில் நீர் முட்டியது. என்னைத் தேடி தாமதமாக வந்ததற்கு இவனையா சந்தேகப்பட்டேன். தவம் செய்தாலும் கிடைக்காத அருமையான புருஷன் கிடைத்திருக்கிறானே. இவ்வளவு பாசம் கொண்டவனுக்க இனி நான் ஏற்றவளா?. இன்று இல்லையென்றாலும் எதிர்காலத்தில் ஏதாவது குத்தல் பேச்சு வந்தால் தன்னால் தாங்க முடியுமா ? மனதுக்குள் குமைந்தாள் மாலதி.
நான் கல்லாய் மாறிடக் கூடாதா? கோமா ஸ்டேஜ் கூட ஏறக்குறைய கல் போன்று உணர்ச்சியற்று தானே கிடக்கும். என்னை ஏன் கடவுள் இப்போதே அழைத்துக் கொள்ளக் கூடாது. குறைந்த பட்சம் கோமா ஸ்டேஜிலாவது ஏன் நான் இருக்கக் கூடாது. ஸ்ரீராம் வேறு நல்லப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ளட்டும் அதற்கு நான் சாகவேண்டும் நான் சாகவேண்டும். நான் சாகவேண்டும் இடைவிடாது அதையே நினைத்தாள் மாலதி! மெல்ல மெல்ல நினைவு தப்பியது.
***
"சார் உங்க வைஃப் கண்ணைத்திறந்து பாக்கறாங்க, எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மென்ட் வேலை செஞ்சுடுச்சு. இனி பயமில்லை பொழச்சிடுவாங்க" டாக்டரின் குரல் காதில் விழுந்தது. மாலதி கண்விழித்த போது ஸ்ரீராமின் அழுது வீங்கியக் கண்கள் தான் கிடைத்தது!
"நன்றி டாக்டர். திடீர்னு நான் சாகனும் நான் சாகனும்னு இவ பினாத்தினது கேட்டுட்டு உலுக்கினா பதிலே இல்லை. நீங்க மட்டும் அப்ப வராம இருந்திருந்தா என்ன கதி. உங்களை என் லைஃப்ல மறக்கவே மாட்டேன் டாக்டர் "
"இட்ஸ் ஆல்ரைட் ஸ்ரீராம். இது கொஞ்சம் சீரியசான அட்டாக் தான். சரியான நேரத்துல கவனிச்சதுல காப்பாத்த முடிஞ்சது. அவங்க மனசு கஸ்டபடாம பாத்துக்கோங்க அதான் ரொம்ப முக்கியம்"
டாக்டர் சொல்லிவிட்டு வெளியேப் போனார்
" ஏன்டா என்னை பொழைக்க வச்சே, நான் உனக்கு இனி லாயக்கு இல்லை. என்னைக் கொன்னுடு. இனிமே நான் இருக்க மாட்டேன். என்னைக் கொன்னுடுடா ஸ்ரீராம்" அழுதாள்.
" உஷ்... மாலதி என்ன இது சின்னப் புள்ளை மாதிரி. நானே ஒரு ஆக்ஸிடென்ட்ல மாட்டி எனக்கு கையோ காலோ போயிருந்தா என்னை கொன்னுடுவியா நீ "
" அதுவும் இதுவும் சமமா "
" ஆமா என்னைப் பொருத்தவரைக்கும் ரெண்டும் சமம் தான். பைத்தியம் பைத்தியம். நீ போயிட்டா நான் மட்டும் உயிரோட இருப்பேன்னு நினைச்சிட்டு இருக்கியாக்கும். இனிமே இது மாதிரி சாகறேன் அது இதுன்னு எதாச்சும் பண்ணே உனக்கு முன்னாடி நான் போய் சேர்ந்துடுவேன்" கண்ணில் வழிந்த நீரை புறங்கையில் துடைத்தான்.
"இனி அப்படி செய்யமாட்டேன் ஸ்ரீராம். பட் இந்த என் உடம்பு இனிமே வெறும் கல் மாதிரி. என் மனசு முழுக்க எப்பவுமே உனக்கு மட்டும் தான். ஆனா இனிமே இந்த உடம்பை நீ உபயோகிக்கக் கூடாது. இது உன் மேல என் மேல சத்தியம்" என்றாள் மாலதி.
"கமான் பேபி. எல்லாம் சரியாய்டும். அழாதே. கூல்டவுன்." ஸ்ரீராம் தொடர்ந்து அவளை ஆறுதல் செய்துக் கொண்டிருந்தான்.
***
"உம். சொல்லு பாட்டி. ஏன் பாட்டி அகலிகை கல்லாப் போனா?"
" அதா கொழந்தே. இந்திரனைப் பாத்ததும் அவன் மேல ஆசைப்பட்டு அகலிகை மனசால கெட்டுப் போய்ட்டா. அதனால அவ தனக்குத் தானே தண்டனை குடுத்துக்கற மாதிரி.. கல்லு மாதிரி இருந்து தவம் செய்துட்டு இருந்தா"
"அய்யோ பாவம்" சூள் கொட்டிய பெண் குழந்தை குரலுக்கு ஒரு ஏறக்குறைய பன்னிரண்டு வயது இருக்கலாம்!
" அப்ப கவுதமர் சாபம் உடலையா "
"இல்லைக் கண்ணு. அவரு சொன்னாரு அகல்யா, உடலால மாசுபடுதல் வேறு மனசால மாசு படறது வேற. மனசால செய்யறது தான் நம் இச்சையோட செய்யறது. அதான் உண்மையான குற்றம். உணர்ந்து திருந்திடனும் உடனே. இருந்தாலும் நீ கல்லு மாதிரி எல்லா இச்சையும் மறந்து தவம் செய்யறதா சங்கல்பம் பண்ணிட்ட்ட இல்லையா. அதனால, ராமன் இங்க வரும் வரைக்கும் நீ தவம் இரு போதும் அப்படின்னார் கவுதமர் "
" அப்போ வேறவங்க மேல ஆசைப் படறது தப்பா பாட்டி "
"அப்படி இல்லை ராசாத்தி. ஆசை படறதுல இல்லை தப்பு. ஆனா துராசை தப்பு. கமிட்மெண்ட். உனக்கு நான் எனக்கு நீன்னு கமிட்மெண்ட் ஆனப்புறம் அதை ப்ரேக் பண்றது ப்ரீச் ஆஃப் காண்ட்ராக்ட் மாதிரி இல்லையா. நம்பிக்கைக்கு செய்ற துரோகம் இல்லயா கண்ணு?. அதை உணர்ந்ததும் தான் அகல்யா தானா ஒரு முடிவெடுத்தா "
" கவுதமர் தான் உணர்ந்து திருந்திட்டா எல்லாம் சரியாய்டும் சொல்றாறே அப்புறம் எதுக்கு அகலிகை இதுமாதிரி தவம் செய்யனும் "
" அவளுக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சி அவளை செய்யத் தூண்டுது "
" இந்தக் காலத்துல இது மாதிரி எல்லாம் ஆகுமா பாட்டி, இப்படியும் பெண்கள் இருக்காங்களா "
"இந்தக் காலம்னு இல்லை எல்லா காலத்திலயும் பெண்களின் மன உறுதிக்கு ஈடா எதுவுமே இல்லைம்மா "
"சரி சரி. அப்புறம் இராமன் வந்தானா பாட்டி அகலிகை கிட்ட "
" ஓ வந்தானே "
பக்கத்து பெட்டில் கால் முறிவிற்காக அட்மிட் செய்து படுத்திருந்த வயதான பாட்டி தன் பேத்திக்கு கதை மூலம் வாழ்கையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது மாலதியின் விசும்பலின் ஊடே மெலிதாகக் கேட்டது!
***
மறுநாள் காலையில் மாலதி இறந்துவிட்டதாகவும், மாலதியின் மரணம் பற்றி போலீஸ் ஸ்ரீராமை விசாரித்துக் கொண்டிருந்தது. சிலர் அதை தற்கொலை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
***
உரையாடல் சமூக இலக்கிய அமைப்பு நடத்தும் போட்டிக்காக