Thursday, October 29, 2009

உதவி தேவை!! (aka ) வெறுங்காற்றில் வீசும் கத்தி

Arthur Rubinstein:

Love life and life will love you back. Love people and they will love you back.

நான் பெங்களூர் வந்த புதுசு. 1996 - 97 என்று நினைக்கிறேன். வேலை எல்லாம் முடித்துக் கொண்டு நண்பனின் வண்டியில் திரும்ப வந்துக்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் பெங்களூரில் எப்போது மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை காரர்களுக்கே தெரியாது. மழையில் சாலை நனைந்திருந்தது. நண்பன் கொஞ்சம் "அல்டாஃப்" டைப். வண்டி வளைத்து வளைத்து ஓட்டியதில் வழுக்கி விழுந்துவிட்டோம். எனக்கு தோள்பட்டையில் சரியான அடி. நண்பனுக்கும் அடிபட்டிருக்க வேண்டும் அல்லது அதிர்ச்சியோ என்னமோ விழுந்த இடத்திலே உக்கார்ந்து விட்டான். கிட்ட தட்ட பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம், அந்த வழி வந்த வண்டிகள் எங்களை சுற்றி சென்றதே தவிர நிறுத்தி எங்களை பார்க்க யாருக்கும் நேரம் இல்லை. சுதாரித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.


அதற்கப்புறம் இரண்டு வருடத்துக்குள் நான் வண்டி வாங்கி தனியாக பயணித்துக் கொண்டிருந்த போது சாலையில் நீர் ஓரடிக்கும் மேல் ஓடிக்கொண்டிருக்க மழை , எனக்கு முன்னாடி சென்றவரை பார்த்துக் கொண்டே சென்ற நான் அவர் அப்படி இப்படி என்று அல்லாட, அவர் எங்கே விழுந்திடுவாரோ என்று நான் சடன் பிரேக் போட.. நான் நடு ரோட்டில் பப்பரப்பே என்று விழுந்து கிடந்தேன். விழுந்த அதிர்ச்சியையும் மீறி போகும் வண்டிகளைப் பார்த்து காப்பாற்றுங்கள் என்று கத்துகிறேன். வண்டிகள் பாட்டுக்கு போய்க்கொண்டு தான் இருந்தன. பத்தடி தூரத்தில் பஸ் எழவும் சக்தியின்றி நான் யாரோ ஒரு டீக்கடைக்காரர் ஓடி வந்து என்னை இழுத்து ஓரமாய் தள்ளிவிட்டு யார் யாரையோ திட்டுக் கொண்டு தோள் துண்டை கிழித்து கையில் வழியும் இரத்தத்தின் மேல் கட்டுப் போட்டார்.


பின்பொரு சமயம், சாப்பாட்டு நேரத்தில் வெளியே உலாத்திக் கொண்டிருக்க, ஒருவர் தன் மனைவியை வண்டியின் பின்னால் வைத்துக் கொண்டு வேகமாச் செல்ல, அந்த பெண்மணிக்கு கைப்பிடிப்பு தவறிவிட்டது போல. தொபீர் என்று நடுரோட்டில் விழுந்தார். ஒரு பத்தடிக்கு உருண்டு சென்று இருப்பார். வண்டியோட்டிக்கு அது தெரியாமல் கொஞ்ச தூரம் சென்று அப்புறம் பின்னாடி பார்த்து பின் திரும்பி வந்தார். வண்டியோட்டிகள் விழுந்தவரை ஒதுக்கி விட்டு வளைந்து செல்லத்தான் செய்தார்கள். ஓரிருவர் மட்டும் சற்று தூரத்தில் நிறுத்தி என்ன ஏது என்று பார்த்து விட்டு சென்றார்கள். நான் ஓடிவந்து தூக்க முயற்சிக்க, அவரின் கணவன் வேண்டாம் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று தூக்கி பாவம் தொபுக்கடீர் என கீழே போட்டார். அப்புறம் அவர் கைப்புறம் நான் கால்புறம் என தூக்கி ஓரமாய் வைத்து ஆசுவாசப் படுத்தி பின்னர் ஆட்டோவை நிறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கூட்டம் கூடியது. வேடிக்கைப் பார்த்தது. சாலை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அடுத்தவர்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள் அதை செய் இதைச் செய் என்று, அல்லது தங்களின் அனுபவங்களைக் கூறிக்கொண்டு இருந்தார்கள். ஆட்டோவில் அவர்கள் போனதும் கலைந்து சென்று விட்டார்கள்.

இதெல்லாம் நேற்று சட்டென்று நினைவுக்கு வந்தது. எனக்கு முன்னே சென்ற ஒரு பெண், ஒரு இருபதின் கடைசியில் இருப்பார். சரேலென வண்டியில் இருந்து விழுந்து விட்டார். பின்னாடி வந்த ஆட்டோ, கார் எல்லாம் க்ரீச்சிட்டு நின்றது. ஆட்டோக்காரருக்கு என்ன அவசரமோ ஒதுங்கி சென்றுவிட்டார். காரில் வந்தவர் காலைக் கடன் முடிக்காமல் அடக்கிக் கொண்டு வந்திருப்பார் போல. கடு கடுவென முகத்தை வைத்துக் கொண்டு ஹாரன் அடித்துக் கொண்டிருந்தார். இரு சக்கர வாகனங்கள் எதிலும் ப்ரேக் இல்லை போல நிறுத்த இயலாமல் ஒதுங்கி சென்று விட்டனர். வண்டியை ஓரத்தில் நான் நிறுத்தி விட்டு வந்து அவரைக் கைப்பிடித்து எழுப்ப முயல, முடியவில்லை. அவருக்கு கால் எலும்பு முறிவு போல. ரொம்பவும் துடித்தார்.

கார் காரருக்கு ரொம்ப "அவசரம்" போல. ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தார். என் ஒருவனால் அந்தப் பெண்மணியை தூக்க முடியாது, கொஞ்சம் வெயிட் பார்ட்டி, அதே நேரம் அவராலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு வர இயலாது. சுற்றும் முற்றும் பார்த்தால் சீருடையில் இருந்த ஒரு என்.சி.சி மாணவி கூட்டத்தைக் கண்டு ஊகித்து ஓடிவந்தார். இருவரும் சேர்ந்து அந்தப் பெண்மணியை தூக்கி பக்கத்தில் இருந்த பேருந்து நிழற்குடையில் அமர்த்திவிட்டு, அவரின் வண்டியை ஓரமாகத் தள்ளி நிறுத்திய பின் காரோட்டிக்கு உயிர் வந்திருக்கும். வேகமாக வண்டியெடுத்துக் கொண்டு போய்விட்டார். இந்த தடவை கூட்டமும் கூடவில்லை.

கீழே வீழ்ந்திருப்பவர் நம்மைச் சார்ந்தவர் என்றால் இப்படி விட்டு விட்டு செல்வோமா என்று யோசிப்பார்களா ?
ஏன் இப்படிப் பட்டவர்கள், நாளை நாம் கீழே விழுந்துக் கிடந்தால் யாரும் உதவ மறுப்பார்கள் என்று யோசிப்பதில்லை ? அந்த நேரத்தில் மட்டும் மற்றவர்களிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. யோசியுங்கள் மக்களே! நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் சமுதாய மிருகக் கூட்டமே. நம் உதவி மற்றவர்களுக்கும் நமக்கு மற்றவர்களின் உதவியும் என்றேனும் தேவைப்படும். உதவி தேவைப்படாத மனிதர்கள் யாருமே இல்லை. உங்களுக்கும் உதவி தேவை. மறந்துவிடாதீர்கள்.

22 comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்