Wednesday, September 10, 2008

ஷியாமளி அத்தை - 03

மெகா சீரியல் காணும் படலம்
---------------------------------
ஒரு நாள் பஞ்சுவின் தரும பத்தினி அவனுடைய அலுவலகத்திற்கு போன் செய்தாள்.
"என்னங்க... உங்க அத்தை என்னமோ அழுதுட்டு உக்காந்துட்டு இருக்காங்க "

சின்சியராய் மதிய உணவு முடித்து விட்டு வேலை பார்த்து கொண்டு (அதாவது தூங்கிக் கொண்டு) இருந்த பஞ்சுஅலறி அடித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

"என்னாச்சி அத்தை..."

"எனக்கு ஒண்ணுமில்லேடா... அபிக்கு என்ன ஆச்சோ எதாச்சோ தெரியலை... அதான்..."

அவன் தன்னுடைய ஒன்று விட்ட சித்தி அபிராமியைச் சொல்வதாய் நினைத்து கொண்டு

" ஏன் அவங்களுக்கு என்ன நல்லா தானே இருக்காங்க "

" அவ நல்ல தான் இருப்பா அந்த படுபாவி ஆதி தான் அவளை ரொம்பக் கொடுமை படுத்துறா"
" அது யாரது ஆதி.."

ஒரு கேவலமான ஜந்துவை பார்ப்பது போல் பஞ்சுவை பார்த்தாள்... பின் சுதாரித்து கொண்டு சொன்னாள்..

" நீ தான் என்ன பண்ணுவ பாவம் இங்க இருக்குறவங்க உன்னை எதுவும் தெரிஞ்சுக்கமுடியாம பண்ணிட்டாங்க " அழுகை தொடர்ந்தது

"அய்யோ!!!! என்னண்னு சொல்லுங்க ...."

"அதாண்டா... நம்ம அபி... என்ன அருமையான பொண்ணு... அவளுக்கு என்னச்சின்னே தெரியலை..."

இண்ணும் பொறுமை தேவையோ இறைவா... அப்படின்னு இவன் அழ ஆரம்பிக்க.... இவன் அழுவதை பார்த்து அவன் மனையாள் அழ... அந்த நேரம் அங்கு வந்த பக்கத்து வீட்டு காரர்கள் என்னமோ ஏதோன்னு கூட சேர்ந்து அழ பெரிய களேபரமா இருந்தது.

பக்கத்து வீட்டு பெண் கேட்டாள்
"என்னாச்சி ??"
பஞ்சுவுக்கு முந்திக்கொண்டு அத்தை சொன்னாள்
" உனக்காவது தெரியுமா அபிக்கு என்னாச்சின்னுட்டு "
" எந்த பார்வதி..... எனக்கு ஒண்ணும் தெரியாதே... வேணும்னா போன் பண்ணி விசாரிச்சிடுங்களேன்"
தன்னை காக்க வந்த பரம்பொருள்.. பெண் வடிவத்தில் சூடிதார் போட்டு கொண்டு வந்ததாய் நினைத்து மானசீகமாய் அவளை கும்பிட்டு கொண்டே சென்னைக்கு போன் செய்தான்.
" சித்தி... நல்லா இருக்கிங்களா... உங்களை பத்தி கவலை பட்டுக்கினு அத்தை அழுதுட்டு இருக்காங்க உங்களுக்கு என்ன உடம்புக்கு ??"

அத்தை வேகமாய் வந்து போனை பிடுங்கினாள்
" ஏண்டி நம்ம அபிக்கு என்ன ஆச்சி "
மறு முனையில் ஏதோ புரிந்திருக்கவேண்டும்.. அங்கு ஏதோ சொல்ல அத்தை சமாதானமானாள்.
" அந்த கடங்காரன் அவ மாஜி புருஷன் வேற அடிக்கடி அவளுக்கு தொந்தரவு பண்றானா சரி சரி ... நான் ஊர் வர்ர வரைக்கும் எல்லாத்தையும் பார்த்து வச்சிக்கோ .. அடிக்கடி போன் பண்ணி கேட்டுக்குறேன்." போனை வைத்தாள். பஞ்சுவுக்கு லேசாக புரிந்த்தது.

அத்தை முழுதும் புரியவைத்தாள்.
" அது ஒண்ணுமில்லேடா... நான் வரும்போது... அபியை எல்லாம் கொடுமைப்படுதிட்டு இருந்தாங்க.. இங்க வேற தமிழ் சேனல் வர்ரது இல்லையா... கோலங்கள் பாக்காமா அபிக்கு என்னச்சோ ஏதாச்சோன்னு பயந்துட்டு இருந்தேன்.. "

" அதாம்மா எனக்கும் கவலையா இருந்திச்சி .. என்னாச்சாம் " பஞ்சுவின் தரும பத்தினி ஆவலாய் கேட்க ஆரம்பித்தாள்

"அவ அமெரிக்கா போய்டாளாம்.. இனிமே தொல்காப்பியன் தான் பார்த்துக்குவானாம் வர வரைக்கும் " நிம்மதியாய் பெருமூச்சு விட்டார்கள் இருவரும்.

பக்கத்து வீட்டுக்காரி நிமான்சில் ( அட நம்மூரு கீழ்பாக்காம் மாதிரி ) இருந்து வெளிவந்த புது ஜந்துவாய் அத்தையையும் பஞ்சுவின் பாரியாளையும் பார்த்து விட்டு நகர்ந்தாள்.

பஞ்சுவிற்கு வேலை பாதியில் விட்டு வந்த்த கவலை ஒரு புறம்.. இந்த அத்தை பண்ண கூத்தில் இனி திரும்பி போய் வேலை (?) முடிக்கவும் முடியாது.. ரொம்ப நேரம் ஆகிவிட்டது..

அத்தோடு இனி வாராவாரம் டெலிபோன் பில் அதிகரிக்குமே என்ற கவலை வேறு. டெபாசிட் இழந்து கட்சிகாரர்களால் வெறுத்து ஒதுக்கபட்டு "அம்மா"வின் திட்டு வாங்கி வெளியே வந்த அரசியல்வாதி போல் பரிதாபமாய் இருந்தான்.

அத்தை, பஞ்சுவின் குழந்தை மாலாவும் அவன் அண்ணன் கோபி என்கிற கோட்டுவும் அடிக்கடி கார்ட்டூன் சேனல் வைப்பதினால் அவர்களை எந்த நேரமும் திட்டி கொண்டு இருந்தாள்.

இருந்தாலும் டாம் அண்ட் ஜெர்ரி வந்தால் இவளும் அவர்களுடன் குழந்தையாய் சேர்ந்து
பார்ப்பாள். ஒரு சமயம் கோட்டு அத்தையின் கண்ணாடியை ஒளித்து வைத்துவிட... அந்த நேரம் ஏதோ சீரியல் வர... கண்ணாடி இல்லாததையும் பொருட்படுத்தாது சீரியல் பார்த்தாள். மொழி புரியாவிட்டாலும் கன்னடா மற்றும் இந்தி மெகா சீரியல்களை பார்த்து கண்ணீர் விட்டு தன் கடமையை சரிவர ஆற்றி கொண்டு இருந்தாள்.

அடுத்து " கணிப்பொறி அறிமுகப்படலம்"
-------

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்