
"அம்மா அந்த திண்ணைய இடிக்க வேண்டாம்னு சொல்லச் சொல்லும்மா"
"ஆமா ... இவரு பெரிய மகாராஜா பரம்பரை இவருக்கு ஆயிரெத்தெட்டு வீடு வச்சுட்டு இருக்காரு. இந்த திண்ணைய இடிக்காம அப்படியே வச்சிருப்பாங்க. இருக்கிற வூட்டுக்கு பங்குபோட்டா கோவணத்துணி மாதிரி இத்துணூண்டு இடம் கிடைக்கும். இத்தினி புள்ளைங்கள வச்சிக்கிட்டு என்னா பண்ணப்போறேனோ!! இதென்னாடான்னா வந்து அத இடிக்காத இத இடிக்காதேன்னுக்கிட்டு"
விஷயம் வேற ஒண்ணுமிலீங்க. எங்கப் பெரீ வீட்ட இடிக்கப் போறாங்களாம். திண்ணையெல்லாம் உடமாட்டாங்களாம். அம்மா சொல்லிக்கினு இருந்தாங்க. அதான்.
பின்ன இருக்காதுங்களா. என்னோட அம்மாக்கு அவங்க கவலை. எனக்கு என்னோடக் கவலை. என்னோட ஆசையானத் திண்ணை இனிமே இருக்காதேன்னுட்டு. நான் யாருன்னு கேக்கறீங்களா? என் பேரு ரத்தினம். பேரு கிடக்குது இருங்க அந்த திண்ணைய இடிக்கறதுக்கு முன்னாடி வீடும் அந்தத் திண்ணையும் எப்படி இருக்குதுன்னு ஒரு சுத்து பாத்துட்டு வந்துடலாம்.
மொத்த அகலத்துக்கும் சேர்த்து ஒரே வீடு. வீட்டுப் பின்னாடி இடதுபக்கம் கிணத்துக்குப் பக்கமா பாக்கறீங்களே பெரிய வேப்பமரம் அதுக்குக் கீழ செங்கல்லு நட்டு வச்சு கூடவே சோலைவாழியம்மன் கோவில்ல இருந்து கொண்டு வந்தக் கல்லையும் வச்சு சாமிக் கட்டி இருந்தாங்க. ஒவ்வொரு வெள்ளிக் கிழமைக்கும் பூசை நடக்கும் அந்த வேப்ப மரத்துக்கு. அது மேல யாரும் கால் வச்சு ஏறுனாலே அங்க எல்லாருக்கும் கோவம் வந்துடும். பின்ன.. ஆத்தா வாசம் செய்யற மரமாச்சே. மரமும் கிணறும் எல்லாருக்கும் பொது. அதாவது மொத்தம் நாலு குடும்பம். ஏறக்குறைய இருபது பேர் இருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
அந்த மரத்துக்கு பக்கத்திலேயே புதர் மண்டின மாதிரி இருக்கில்ல அது முல்லைப்பூச் செடி. ரொம்ப வருஷமா இருக்கு. சாயங்காலம் ஆனா அப்பா, பசங்க பொண்ணுங்கன்னு அதுல பூப்பறிச்சு அதை வீட்டுப் பெண்டுக கட்டி குழந்தைகளுக்கு வச்சது போக மிச்சத்த பகிர்ந்து தலைல வச்சுப்பாங்க. அப்படியும் அதிகம் மிஞ்சிடும் சில நாள்ல. அதை பக்கத்து வீட்டு பவுனு அத்தைக்கும் குடுப்பாங்க.
அந்த வேப்ப மரத்துக்குப் பக்கத்துல இருக்குதே அந்தக்கிணத்துலத் தான் என்னோட நடு அண்ணன் தூர் வார இறங்கி எல்லாம் செஞ்சுட்டு இருக்கும் போது கிணத்துக்கு மேல ராட்டிணத்துக்குன்னு கட்டி வச்சிருந்த சுவரு இடிஞ்சு விழுந்து தெய்வாதீனமா தப்பிச்சுக்கிட்டாரு. என்ன பிரயோசனம்? ஒரு பதினஞ்சு இல்ல பதினெட்டு வருஷம் கழிச்சு ரோடு ஆக்ஸிடென்டுலத் தான் அவரு இந்த உலகத்தை விட்டுப் போகப்போறது யாருக்குத் தெரிஞ்சுருக்கும் சொல்லுங்க?.
சரி இப்படியே பின்னாடி வந்தீங்கன்னா மொதல்ல இருக்கே அந்த பக்கம் பெரியப்பாவும், நடுவுல நாங்களும், அதுக்கப்புறம் சித்தப்பாங்க ரெண்டு பேரும் இருக்கிற பெரிய வீடுதான். சரி வாங்க வெளிய வரலாம்.
இங்க இடது பக்கமா பாக்கறீங்க இல்லையா சின்னத்திண்ணை, கொஞ்சம் நல்லாப் பாத்தா அங்க ஒரு கொட்டடி கூட இருக்கும். எங்கப்பாரு ரூம்பு அது. வெளிய ஒரு தூண் இருக்கே அதுல தான் எங்க பெரியண்ணன் எப்பவும் நிக்க வச்சு அடிப்பாரு. அட தப்பு செஞ்சாலும் செய்யலன்னாலும் ஏதோ ஒரு காரணத்துக்கு வீட்ல எல்லாரும் என்னைத்தான் அடிப்பாங்க. அவங்க கோவம் தீரனும் இல்லீங்களா. வேற யாருகிட்ட காமிக்க முடியும். வூட்ல நாந்தானே கடசீப்பையன்.
வலதுபக்கத்துல பாக்கறீங்களே பெரியத் திண்ணை. மொத்தம் ஆறு தூண்கள். ஏதாவது விஷேஷம்னு வந்தா ஒரு இருபத்தஞ்சு பேரு இல்ல முப்பது பேரு ஒண்ணா உக்காந்து சாப்டற அளவுக்கு உண்டு.
அதுல மீசைத்தாத்தா அதான் எங்கப்பாவோட அப்பா இறக்கற வரைக்கும் ஆட்சி செஞ்ச இடம். அந்த மீசையப் பாக்கணுமே!. கூழ் குடிச்சு முடிச்சு அப்படி நீவி விடுவாரு பாருங்க.. அடாடா.. இனி யாருக்கு வரும் அந்த மீசை.
ரெண்டு திண்ணைக்குமே ஆரம்பத்துல அதாவது வாசப்படி ஆரம்பிக்கிற ரெண்டு பக்கத்துலையுமே சாஞ்சு உக்கார ஏதுவா சுண்ணாம்பும் செங்கல்லும் வச்சுக் கட்டின சாய்வான இடம். . இதை எப்படிச் சொல்றது? அட |\ இப்படி இருக்கும். எனக்கும் சரி எங்க அண்ணனுக்கும் சரி அந்த சாய்வுச் சுவர் ரொம்ப பிடிச்ச இடம். கிணத்துல துளாஞ்சு வந்துட்டு கொண்டுவந்த துண்டை அது மேல போட்டுட்டு அந்த ஈரத்துக்கு அப்படியே சாஞ்சு உக்காந்த்துக்குற சுகம் இருக்கே அது அனுபவிச்சாத் தானே தெரியும்.
ரொம்ப நாளா உபயோகத்துல இருக்கிறதால நல்ல வழவழப்பா இருக்கும். அதுல கூட்டல் வாய்ப்பாடு, பெருக்கல் வாய்ப்பாடு எழுதி பழகறது, வீட்ல அண்ணன் கிட்ட சண்டைப் போட்டா கோவிச்சுட்டு வந்து படுத்துக்கிறது அப்புறம் பசிக்கிறப்ப லேசான வீச்சத்தோட இருக்கும் ரேஷன் அரிசிச் சாப்பாடு வேண்டாம்னு அடம் பிடிச்சு அம்மாட்ட அடி வாங்கிட்டு வந்தா அந்த அடியோட வலி போகவைக்கறது அந்த சாய்வுச் சுவர்தான்.
வெய்யில் காலம் ஆனா என்னோட நடு அண்ணன் அதாங்க கிணத்துல விழுந்து தப்பிச்சாரே அவரு வந்து என்னைய இழுத்து மடியிலப் போட்டுட்டு நெத்தியில பூத்திருக்கிற வேர்க்குருவை ஒவ்வொண்ணா கிள்ளி விடுவாரு அது பெரிய கட்டியா ஆகாம இருக்கவாம். அதோ அந்தப் பெரியத்திண்ணையோட மூணாவது கம்பம் இருக்கு இல்லையா.. அங்கத்தான் பெரும்பாலும் அது நடக்கும்.
வெய்யக்காலமோ குளிர்காலமோ அந்தத் திண்ணைல எப்பவுமே படுக்கை இருக்கும். பெரும்பாலும் வீட்டுக்குள்ள படுத்த நாட்கள் குறைவுதான்.
வருஷத்துக்கு ஒரு முறை மாரியம்மன் கூழ் திருவிழா நடக்கும் இல்லையா.. அப்ப பெரியத் திண்ணையிலத்தாங்க பெரிய பெரிய ட்ரம் தண்ணீரும், பானகம் மோருன்னு ஒவ்வொன்னு வைப்பாங்க. அது பூர்த்தி காலியாகறதுக்கே சாயந்திரம் ஆறு ஏழு ஆகிடும். எங்க அண்ணன் அக்கா அப்படின்னு ஆளுக்கொரு ஜோடுதல வச்சுட்டு வர்ரவங்க போறவங்களுக்கு ஊத்திக் கொடுப்பாங்க. பின்ன பாவம் இல்லைங்களா.. அக்கினி வெயில் அப்படிக் கொளுத்துமே. சாப்டக் கூடத்த் தோணாம அவங்க அப்படி செஞ்சுட்டு இருப்பாங்க.
அந்த ஊர்ல அதிகம் பஸ் வசதி இல்லீங்களா அதனால பக்கத்து ஊருக்க்காரங்களும் இவங்க ஊரத்தாண்டி தான் வேற ஊருப் போகனும். அப்படிப் போறவங்க அந்தத் திண்ணைல உக்காந்து இளைப்பாறிட்டுப் போவாங்க. ஏன்னா அந்தத் தெருவுலையே இந்த வீட்டுத்திண்ணை தான் ரெண்டாவது பெரிசு. அட முத பெருசு யார்துண்ணு கேக்கறீங்களா.. அது அந்தச் செட்டியார் வீடுங்க. ஆனாலும் இந்தத்திண்ணைல தான் நிறைய பேரு இளைப்பாருவாங்க. அந்த செட்டியார் ஆயா யாரையும் அங்க உக்கார விடாது. தொரத்தி விட்டுடும். அதனாலத்தான்.
அதுவும் இல்லாம எங்க வீடு தான் அந்த ஊரோட கடைசீ வீடு. அதைத் தாண்டினா ஒரு ரெண்டு மூனு பர்லாங்குக்கு வெறும் தெரு தான். மரம் கூட நிழலுக்குக் கிடையாது. வெறும் முள்ளுச்செடிங்கத்தான் இருக்கும்.
ராத்திரிதான் எங்க ஊட்டாளுங்களே திண்ணைல படுத்துப்பாங்களே அப்ப வர்ர போறவங்களுக்கு என்ன பண்றதுன்னு அந்தப் பெரியத் திண்ணைக்கும் சின்னத்திண்ணைக்கும் வெளிப்புறமா ஒண்றை அடிக்கு ஒட்டுத் திண்ணை கட்டிவச்சிருந்தாங்க.
தாத்தா செத்துப்போய்ட்டாங்கல்ல அப்பக் கூட இந்தத் திண்ணைலத் தாங்க போட்டு வச்சாங்க. எனக்கு என்னமோ அழுகையே வர்லீங்க. அழாம இருந்தா குட் பாய்தானே! எல்லாரும் அழறாங்களேன்னு சும்மா அழுது பாக்கலாம்னு ட்ரைக்கூட பண்ணேன். எனக்கே செம காமெடியாப் போச்சு. சிர்ப்பு சிர்ப்பா வஞ்ச்சி. சிர்ச்சா அம்மா அடிப்பாங்களேன்னு சிரிக்கல. அப்புறம் ஆயாக் கூடத்தான் செத்துப் போச்சு. அப்பவும் இந்தத் திண்ணைலத் தான் போட்டு வச்சாங்க. அட அப்பக் கூட அழவே இல்லையே. குட் பாயாத்தான் இருந்தேன்.
அப்புறம் போன மாசம் என்னாச்சுன்னே தெர்லீங்க. எங்கப்பாரு ரொம்ப வெசனப்பட்டுக்கிட்டு இருந்தாரு. எங்கப் பெரிப்பாரு சித்தப்பாருங்கக் கூடத்தான். என்னமோ பிரிக்கனும் பிரிக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்புறம் ஊர்ல பெரிமன்ஷங்கத் தாத்தால்லாம் வந்தாங்க. அது யாரா ? அய்ய அது கூடத்தெரில. அந்த ஊரு கவுண்டுரு தாத்தா அப்புறம் மோலியார் தாத்தா அப்புறம் நாலஞ்சு பேரு வந்தாங்க. பெரிப்பா சித்தப்பாருங்க எல்லாரும் கோவம் கோவமா பேசிட்டு இர்ந்தாங்களா, கடைசீல பெரிமனுஷங்கத்தாத்தாங்கத்தான் இப்டியே இர்ந்தா ஆவாது பிர்ச்சுகங்கன்னுட்டு போய்ட்டாங்க.
ஆளுக்கு பதினைஞ்சுக்கு நாப்பதுன்னு பிர்ச்சிக்கங்க. அந்த மரத்தையும் கெணத்தையும் பொதுவுல இருக்கட்டும்னுட்டாங்க. இப்ப பாத்தீங்களே பெரீத் திண்ணை அதுக்கு நடுப்பக்கம் தான் எங்களுக்காம். மொத்தத் திண்ணையில இனிமே படுத்துக்க முடியாதா ? மாரியாத்தாக் கூழு ஊத்தும்போது எங்க வச்சு நாங்க பானகம் தருவோம். நடந்து போறவங்க எங்க உக்காந்துட்டு போவாங்க, அந்த செட்டியார் ஆயாத்தான் யாரையும் அவங்கத்திண்ணைல உக்கார விடாதே
நீங்களாவது சொல்லுங்களேன் இந்தத் திண்ணைய இடிக்க வாணாம்னு.
" என்னாத்தை அந்தத் திண்ணையில ஒளிச்சு வச்சிருக்கானோ.. எப்பப்பாரு திண்ணையிலேயே " அம்மா என்னப் புடிச்சு இழுத்துட்டுப் போறாங்க. வீடு இடிக்கிறாங்களாம். அதுக்கு முதல்ல திண்ணையத்தான் இடிக்கணுமா ?
மறு நாளு எனக்கு ஜொரம். கண்ணெல்லாம் எரிச்சலா இருந்துச்சு. ஆனாலும் பாத்தீங்களா ? நான் இப்பவும் குட்பாயா அழவே இல்லை. அம்மா, அப்பா அண்ணாக்கிட்ட எல்லாம் சொல்றீங்களா ? உடம்பு சரியானதுக்கப்புறம் சும்மா சும்மா அடிக்க வேண்டாம்னு? இப்பத்தான் அந்த சாய்வுச் செவுறு இல்லையே நான் எங்கப் போயி படுத்துப்பேன்?
***************
முதல் புகைப்படம் உதவி : http://www.trekearth.com/gallery/Asia/India/photo736997.htm
அடுத்தது : http://farm1.static.flickr.com/53/111779504_d072ba83cd.jpg?v=0
திண்ணையப் பத்தி மேலும் எழுத அருமை அண்ணன் திருவாளர் நிஜமா நல்லவனை அழைக்கிறேன்
பாலா அண்ணாச்சியின் திண்ணைத்தொகுப்புப் பதிவின் சுட்டி
Friday, June 13, 2008
வெறும் வெட்டித் திண்ணைப்பேச்சு!!
Labels:
அனுபவங்கள்,
கதை மாதிரி,
கொசுவர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)




21 comments:
//ரெண்டு திண்ணைக்குமே ஆரம்பத்துல அதாவது வாசப்படி ஆரம்பிக்கிற ரெண்டு பக்கத்துலையுமே சாஞ்சு உக்கார ஏதுவா சுண்ணாம்பும் செங்கல்லும் வச்சுக் கட்டின சாய்வான இடம். . இதை எப்படிச் சொல்றது? அட |\ இப்படி இருக்கும். //
ஆமாம் அது ஒரு சாய்ந்து அமைந்துகொள்வதற்காக பிரத்யோகமாக ஒரு குழைவாக செய்யப்பட்ட அமைப்பு! பெரியவங்க அதிலே சாஞ்சாப்புல உக்கார்ரதுக்குன்னு செஞ்சுக்கிட்ட விஷயம்!
//மறு நாளு எனக்கு ஜொரம். கண்ணெல்லாம் எரிச்சலா இருந்துச்சு. ஆனாலும் பாத்தீங்களா ? நான் இப்பவும் குட்பாயா அழவே இல்லை. அம்மா, அப்பா அண்ணாக்கிட்ட எல்லாம் சொல்றீங்களா ? உடம்பு சரியானதுக்கப்புறம் சும்மா சும்மா அடிக்க வேண்டாம்னு? இப்பத்தான் அந்த சாய்வுச் செவுறு இல்லையே நான் எங்கப் போயி படுத்துப்பேன்?//
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு! திண்ணை ஞாபகம் உங்களை அதிகம் காயப்படுத்தியிருக்கிறது என்பதை மட்டும் உணரமுடிகிறது!
எங்க ஊர் வீட்டில் திண்ணை இன்னும் இருக்கு. நாங்கதான் போய் உக்கார முடியாம இருக்கோம்!!
அப்புறம் சீட்டுக் கச்சேரி பத்தி ஒண்ணும் சொல்லலையே.....
எம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம் பெரிய பதிவு. ஆமா நான் உங்களுக்கு அண்ணனா? என்ன கொடுமைங்க ஜீவ்ஸ்?
:)....
enna sollanu thaan theriyala...
நல்லா வந்துருக்கு ஜீவா.
அந்த சாய்மானத்துலே அக்கா குழந்தையை உக்காரவச்சா அப்படியே வழுக்கிக்கிட்டு வரும். டக்னு புடிச்சுக்குவேன். இப்படியெல்லாம் ஒரு விளையாட்டு:-)
நண்ப ஜீவ்ஸ்
கொசுவத்தி சுத்த வைச்சீட்டிங்க
திண்ணை எல்லாம் அக்காலம் - இப்போ திண்ணை கட்டற அளவுக்கு வசதி இல்ல - ஆயினும் இன்னும் கிராமப்புறங்களிலே பெரிய வீடுகளிலே திண்ணை இருக்கு.
ஒரு திண்ணையின் பயன்கள் எத்தனை ? அத்தனையும் குறிப்பிட்டு விட்டீர்கள் - நன்று நன்று
திண்ணைத் தொடரா ? நிஜமா நல்லவன் எழுதணுமா - குட்பாயா எழுதச் சொல்லுங்க
நல்வாழ்த்துகள்
ம். அருமையான பதிவு.
நானும் ப்ளாஷ்-பாக் போயிட்டன். எங்க கிராமத்து வீடும் இப்பிடிதான்.
ஒரு பெரிய வீடு.. இப்போ மூனா பிரிஞ்சி கிடக்கு.
ம். எங்க வீட்டு திண்ணையிளையும்.. நீங்க சொன்ன கூழ் சமாசாரம், கோயில் திருநா தண்ணி, பானகம், சைக்கிள் காத்து பம்ப், டிரன்ச்பார்மர் ராடு எலலாம் உண்டு.
யோவ்.. ஜீவ்ஸ்.. ரொம்ப பிரச்சின பன்றயா நீ, இந்த மாறி பதிவு போட்டு.
ரொம்ப அழகா எழுதிருக்கீங்க ஜீவ்ஸ்... படிச்சு முடிச்சப்புறம் மனச என்னவோ செய்யுது....
ரொம்ப நல்லா வந்திருக்கு பதிவு. திண்ணையுடன் எனக்கு அவ்ளோ பரிச்சயம் கிடையாது என்ற போதிலும் பல்வேறு பதிவுகளில் படிக்கும்போது எதோ மிஸ் பண்ணீட்ட ஃபீலிங்.
நல்லா வந்திருக்கு.
பாகப்பிரிவினை நடக்கும் பொழுது சிறுவர் சிறுமியரே பெரிதும் அவதிப்படுகின்றனர்.
:(
:)))
ரொம்ப நல்ல திண்ணைப்பேச்சு... எல்லாரையும் சோகத்துல தள்ளிட்டீங்களா.. அந்த சாய்வு|\ பகுதியைப்பத்திய இடத்தை குறிச்சிக்கிட்டேன்.. என்வீட்டுல கட்டனும் இல்ல..
முதல் படம் அருமை... எடுத்தவருக்கு பாராட்டுக்கள்.
//அட தப்பு செஞ்சாலும் செய்யலன்னாலும் ஏதோ ஒரு காரணத்துக்கு வீட்ல எல்லாரும் என்னைத்தான் அடிப்பாங்க. அவங்க கோவம் தீரனும் இல்லீங்களா. வேற யாருகிட்ட காமிக்க முடியும். வூட்ல நாந்தானே கடசீப்பையன்.//
படிக்கவே ஆனந்தமா இருக்கு.. :))
பதிவு சூப்பர்..
//யோவ்.. ஜீவ்ஸ்.. ரொம்ப பிரச்சின பன்றயா நீ, இந்த மாறி பதிவு போட்டு.
// ரிப்பீட்டேய்.
பழைய நினைவுகளுக்கு கொண்டு போய்விட்டீர்கள். பெருமூச்சு இன்னும் மறையல. காலநிலைமைகளை சாக்கு சொல்லி மறந்துவிட்ட மண்ணின் வாடை திரும்ப கிடைத்தது போல் உணர்ந்துகொண்டிருக்கையில் திண்ணையை உடைத்து... ஏம்பா துக்கத்தை அள்ளிக்குடுக்கறீங்க. இனி கிடைக்குமா அந்த நாட்கள், அட ஒண்ணு விட்டுட்டீங்க அய்யப்பன், மழைக்கால அனுபவம் திண்ணையில உக்கார்ந்து (குத்துக்கால் போட்டு)மழைய வேடிக்கைப் பார்க்கிறதும், பள்ளிக்கூடம் லீவு உட்டாங்கன்னா கத பேசுரதும், அப்புறம் ரெண்டு தலவாணி வச்சு போர்வைய ஆள் தூங்கறா மாதரி செட்அப் பண்ணி செகண்ட் ஷோ படம் பார்க்க போனது, \\யோவ்.. ஜீவ்ஸ்.. ரொம்ப பிரச்சின பன்றயா நீ, இந்த மாறி பதிவு போட்டு.\\
நிஜம்மா கண்ணுல தண்ணி கசிஞ்சிடுச்சிப்பா.
பேரு ரத்தினமா? மாத்தி சொல்லிட்ட மாதிரி இருக்கு.
வாசி சொன்ன மாதிரி மழைய திண்ணைல உக்காந்து வேடிக்கை பார்ப்பது பரம சுகம்.
ம்ஹூம் ஏக்கமாத்தான் இருக்கு
திண்ணை நினைவுகள் முட்டி மோதீருச்சு போல :)
ஆனா ஏன் சோகமா முடிச்சீங்க :(
திர்ணைன்னு எங்கூர்ப்பக்கம் சொல்வாங்க. எனக்கும் வீட்டில் பிடித்த இடங்களில் திர்ணையும் ஒன்று. அதில் ஏறுவதும்..குதிப்பதும் விளையாட்டுதான்.
சில துன்பங்கள் சுகமானவை!
நல்ல பதிவு!! நினைவுகளை கிளறிட்டீங்க அண்ணாச்சி :)
Wow... கலக்குறீங்க Jeeves. ஒரே flashback தான் போங்க... நல்லவேளை எங்க வீட்டு திண்ணைக்கு இந்த மாதிரி எதுவும் ஆகலை. நேத்து தான் எங்க கிராமத்து வீட்டு திண்ணைல உட்கார்ந்து பேசிட்டு வந்தேன். :-)
அருமையான பதிவு என்றும் அழியாத நினைவுகளைப் பற்றி.
எனது திண்ணையையும் சற்றே எட்டிப் பாருங்கள் நேரம் கிட்டும் போது..http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html
தாங்கள் I\ இப்படிக் குறியிட்டுக் காட்டிய சாய்வுத் திண்டு நான் பிறந்து வளர்ந்த வீட்டின் வெளித் திண்ணையிலும் உண்டு, /I இப்படி.
Post a Comment